உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசு... 8 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

0 12420

நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ள கூலித்தொழிலாளர்கள் - ஏழைகளுக்கு மத்திய அரசு சார்பில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதலாக
5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 8 முக்கிய அறிவிப்புகளை, நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவிகளை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகை அச்சுறுத்தும் கொரோனா, இந்தியாவில் 3 மாதங்களுக்குள் முற்றிலும் தடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 8 கோடியே 69 லட்சம் விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் முதற்கட்டமாக தலா 2 ஆயிரம் ரூபாய் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் செலுத்தப்படும் - 63 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை, கடனுதவி வழங்கப்படும் - 3 கோடியே 50 லட்சம் கட்டிட தொழிலாளர்களின் வாழ்வாதரத்திற்கு உதவும் வகையில் மாநில அரசுகள் மூலம் 31 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவிற்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் - 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் 5 கோடி பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய், அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் - மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும் - வங்கிகளில் ஜன்தன் கணக்குகள் வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த
3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும் - உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற 8 கோடி குடும்பங்களுக்கு, தலா 3 சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும், நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

100 தொழிலாளர்களுக்கு கீழ் பணியாற்றும் நிறுவனங்கள், தொழிலாளர்கள் சார்பில் தலா 12% இபிஎஃப் தொகையை மத்திய அரசு 3 மாதங்களுக்கு செலுத்தும் என்றும்,
தொழிலாளர்கள் பிஎஃப் பணத்தில் 75சதவீதம் அல்லது 3 மாத ஊதியம், இவற்றில் எது குறைவோ அதை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments