கொரோனாவை வெல்வோம் பிரதமர் மோடி சூளுரை

0 4051

21 நாள் ஊரடங்கை கடைபிடித்து கொரோனாவை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி இக்காலகட்டத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் ஏழை எளியமக்களுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளார். 

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்த பிரதமர் மோடி முதல் நாள் பெரும்பான்மையான மக்கள் ஆதரவுடன் தொடங்கிய 21 நாள் ஊரடங்கு குறித்து தமது கருத்துகளை தெரிவித்துள்ளார். வாரணாசி தொகுதி மக்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய அவர், இக்கடுமையான காலக்கட்டத்தில் ஏழை மக்களுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்தார். மக்கள் இந்த 21 நாட்களும் வீட்டில் இருப்பதைத் தவிர கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியே இல்லை என்பதை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். மக்கள் அனாவசியமாக வெளியே நடமாட வேண்டாம் என்றும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும் மோடி கேட்டுக் கொண்டார். மகாபாரத யுத்தம் 18 நாட்கள் நடைபெற்றது என்றும் கொரோனாவுக்கு எதிரான யுத்தம் 21 நாட்களுக்கு நடைபெறுவதாகவும் மோடி தெரிவித்தார்.

மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் போன்ற அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் மீது தாக்குதல் நடைபெறுவதாக தகவல்கள் வெளியானதையடுத்து, கொரோனாவை எதிர்க்க தங்கள் சொந்த உயிரைப் பணயம் வைத்து போராடும் மருத்துவர்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவர்களும் செவிலியர்களும் கடவுளைப் போன்றவர்கள் என்றும் மோடி கூறியுள்ளார்.

இதனிடையே பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் உள்ள 5 கோடி ஏழைகளுக்கு 21 நாட்கள் ஊரடங்கு காலத்தில் உணவுப் பொருட்களை விநியோகிக்க உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments