கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள்

0 36039

தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றது என்பது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை ஒரே நாளில் இருமடங்காக உயர்ந்துள்ளது.

அப்படி கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், அறிகுறியுடன் சென்னை ராஜீவ்கந்தி அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கும் என்னென்ன உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.மனித உடலில் எதிர்ப்பு தன்மையை உண்டாக்கும் வகையிலான உணவை, ஊட்டச் சத்து நிபுணர்கள் மருத்துவமனையில் தயாரித்து வழங்கி வருகின்றனர்.

அதன்படி காலை 7 மணிக்கு இஞ்சி, தோலுடன் கூடிய எலுமிச்சையை வெந்நீரில் நன்றாக கொதிக்க வைத்து கொடுக்கப்படுகிறது.
காலை : 8.30 மணிக்கு 2 இட்லி, சாம்பார், ஆனியன் சட்னி, சம்பா ரவை கோதுமையால் ஆன உப்புமா, 2 வேக வைத்த முட்டை, பால், பழரசம் ஆகியவையும், காலை 11 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி,தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீரில் சிறிது உப்பை சேர்த்தும் கொடுக்கப்படுகிறது.

பகல் 1 மணிக்கு இரண்டு சப்பாத்தி, புதினா சாதம் 1 கப், வேக வைத்த காய்கறிகள், 1 கப் கீரை, பெப்பர் ரசம், உடைத்த கடலை 1 கப் வழங்கப்படுகின்றது. மாலை 3 மணிக்கு மிளகுடன் மஞ்சள் கலந்து காய்ச்சிய சுடு தண்ணீரும் மாலை 4 மணிக்கு : பருப்பு வகைகளில் மூக்கு கடலை சுண்டல் ஒரு கப் கொடுக்கப்படுகின்றது.

இரவு 7 மணிக்கு 2 சப்பாத்தி, ஆனியன் சட்னி, இட்லி அல்லது சம்பா ரவா கோதுமை உப்புமா, ஒரு முட்டை வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார் ஊட்டச்சத்து நிபுனர் சுஜாதா..!

நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் பணியில் இருக்க கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும், முட்டை, பழரசம் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவு பொருட்கள் தொடர்ந்து 3 வேளையும் வழங்கப்பட்டு வருகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க கூடிய உணவுவகைகளை சாப்பிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் நோய் தடுப்பு மருந்துகளுடன் இணைந்து செயல்பட்டு கொரோனா கிருமிகளை உடலில் இருந்து விரட்டிவிடும் என்ற நம்பிக்கையில் இந்த உணவுகள் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments