கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு

0 883

கொரோனா பரவலைத் தடுக்கத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் மாவட்டங்களில் உள்ள நிலவரத்தைச் சுருக்கமாகக் காணலாம்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பரவை என்னும் ஊரில் சந்தை இன்று வழக்கம்போலத் திறக்கப்பட்டது. இதனால் சந்தையில் காய்கறி வாங்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். தகவல் அறிந்த நாகப்பட்டினம் வட்டாட்சியர் பிரான்சிஸ் கடை உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தியதுடன், காவல்துறையைக் கொண்டு பொதுமக்களை அப்புறப்படுத்தினார். இதையடுத்துக் காய்கறிச் சந்தை மூடப்பட்டது. பொருட்கள் வாங்க வருபவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்றால் கொரானா பரவுவதை தடுக்க முடியும்

தேனி மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணியாளர்கள், அரசுப்பணியாளர்கள் சென்று வருவதற்காகக் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையங்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகிய இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. தேனியில் பெரியகுளம் சாலை, மதுரைச் சாலை, கம்பம் சாலை, பகவதி அம்மன் கோவில் தெரு, எடமால் தெரு ஆகிய பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பொதுமக்களின் வசதிக்காகப் பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் நடமாடுவோரை எச்சரிக்கும் வகையில்  காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் முற்றிலும் வெறிச்சோடிக் காணப்படுகிறது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சென்னை - திருச்சி நால்வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி மூடப்பட்டது. செங்கல்பட்டு - விழுப்புரம் மாவட்ட எல்லையான இப்பகுதியில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்படுகின்றன. மதுராந்தகத்தில் அனைத்துக் கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

காஞ்சிபுரம் சந்தையில் பொருட்களை வாங்க வரும் மக்கள் அனைவரும் நன்றாகக் கைகளைக் கழுவிய பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவாயிலில் இருந்து ஒருவர்பின் ஒருவராக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால், பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனக் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டதுடன், மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் அனைத்துச் சாலைகளும் பேருந்து நிலையங்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பொதுமக்களின் வசதிக்காகக் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் திறந்துள்ளன. இன்றியமையாப் பொருட்களை நியாயமான விலைக்கு விற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார். பொருட்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார். 

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக - கர்நாடகம் இடையே வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது. காய்கறி, பால், உணவுப்பொருட்கள், எரிபொருட்கள் கொண்டுசெல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
கோபிச்செட்டிப்பாளையம் சந்தையில் பொதுமக்கள் பல நாட்களுக்குத் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். கொரோனா பரவலைத் தடுக்கவே தனிமைப்படுத்தலுக்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக மக்கள் கூட்டமாகக் கூடுவது எதிர்விளைவையே ஏற்படுத்தும். காய்கறிகள், உணவுப்பொருட்கள் விற்கும் கடைகளுக்கு 21 நாட்களும் தடையில்லை என்பதால் மக்கள் கூட்டமாகச் சேராமல் தனித்தனியாகச் சென்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.ஈரோடு உழவர் சந்தையின் நுழைவாயில், வெளிப்பகுதிகளில் விவசாயிகள் அல்லாத வணிகர்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் காய்கறிக்கடைகளை வைத்திருந்தனர். தகவலறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் வணிகர்களை அப்புறப்படுத்தினர்.

தஞ்சாவூரில் காந்தி சாலை, அண்ணாசாலை, பெரிய கோவில் சாலை என அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.கீழவாசல் சந்தையில் மக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், உணவுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் கிலோ 60 ரூபாய்க்கு விற்ற கோழியிறைச்சி நூறு ரூபாயாக உயர்ந்துள்ளது. மீன் சந்தையில் மீன் வாங்க மக்கள் கூட்டமாகச் சென்றதால் காவல்துறையினர் அவர்களை வெளியேற்றியதுடன், மீன் கடைகளையும் மூடுமாறு அறிவுறுத்தினர். பொதுமக்கள் வெளியே நடமானாடியால் கொரோனா பரவும் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி 1 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி - திருவனந்தபுரம், நாகர்கோவில் - காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலைகள் உட்படச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம் ஆகியன ஆள்நடமாட்டம் இன்றிக் காணப்படுகின்றன. தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையான களியக்காவிளை, திருநெல்வேலி - கன்னியாகுமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு ஆகிய பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வெளியே செல்லவும் வெளியில் இருந்து மாவட்டத்திள் செல்லவும் முடியவில்லை. மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் மட்டுமே திறந்து இருந்தாலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

சேலம் சின்னகடை வீதி, பட்டைக்கோவில் பகுதிகளில் உள்ள சந்தையில் பொதுமக்களின் வசதிக்காகக் காய்கறிக் கடைகள் மளிகைக் கடைகள் திறந்து வணிகம் நடந்தது. அரிசிக் கடைகளும் திறந்திருந்தன. 21 நாட்கள் ஊரடங்கு என்பதால் பல நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அதிக அளவில் மக்கள் கூடினர். மக்களிடையே இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்கிற நோக்கத்துக்கு எதிராகக் கூட்டம் சேர்ந்ததால் கடைகளை அடைக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதையடுத்துக் கடைகள் மூடப்பட்டன. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தையும் ஈரோடு மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் காவிரியாற்றின் மீது குமாரபாளையத்திலும் பள்ளிப்பாளையத்திலும் உள்ள பாலங்கள் மூடப்பட்டுள்ளன. இன்றியமையாப் பொருட்கள் கொண்டுசெல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உழவர் சந்தை, மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள், உணவகங்கள், மருந்துக் கடைகள் ஆகியன மட்டும் திறந்துள்ளன. பொதுமக்கள் பல நாட்களுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இருசக்கர வாகனங்களில் வழக்கம்போல் அடிக்கடி அங்குமிங்கும் சென்று வந்த சிலரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.

புதுச்சேரியில்., கிழக்குக் கடற்கரைச் சாலை, திண்டிவனம் சாலை, கடலூர் சாலை, வளவனூர் சாலை ஆகியன மூடப்பட்டுள்ளன. தமிழக வாகனங்களும் வெளிமாநில வாகனங்களும் புதுச்சேரிக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. ஆம்புலன்ஸ், இன்றியமையாப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் ஆகியன மட்டும் புதுச்சேரிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. புதுச்சேரியின் முதன்மையான சந்திப்புகளில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவப் பணியாளர்கள், அரசு ஊழியர்களைத் தவிரப் பிறரைச் சாலையில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், நகரின் முதன்மையான சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசு உத்தரவை மீறிக் கடைகளைத் திறந்து வைத்தல், தடையை மீறி வெளியே சுற்றியவர்கள் எனக் காவல் நிலையங்களில் 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments