தனிமைப்படுத்தப் பட்டிருந்த நபர் வெளியில் உலவியதாக வழக்குப் பதிவு

0 1451

துபாயிலிருந்து வந்து வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த நபர், மருத்துவ அதிகாரி உத்தரவை மீறி வெளியில் உலவியதாக சென்னையில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், சென்னையில் மூவாயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் சிலர் மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலை மீறி ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெளியில் சென்றிருப்பதாகவும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நபர் வெளியில் சென்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயதான கட்டிட பொறியாளர் பணி நிமித்தமாக அடிக்கடி துபாய் சென்று வந்துள்ளார். அண்மையில் துபாயில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட பிறகு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மருத்துவ குழு அவரை பரிசோதித்து 14 நாட்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தியது. ஆனால் மருத்துவ அதிகாரியின் உத்தரவை மீறி பொறியாளர் சென்னையில் பல இடங்களுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சென்னை மாநகராட்சி 10 - வது மண்டல மருத்துவ அதிகாரி டாக்டர் சுகன்யா தேவி புகார் அளித்தார். இதை தொடர்ந்து கோடம்பாக்கம் போலீசார் இவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 188- அரசு அதிகாரியின் தடை உத்தரவை மீறி செயல்படுதல், 296- ஆபத்தை விளைவிக்கும் தொற்று நோய் பரப்பும் செயல்பாடு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே இது போன்ற அறிவுரைகளை மீறுபவர்கள் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று கூறியும் வெளியே சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நோய் தொற்றை தடுப்பதற்கு வீட்டில் இருக்க அறிவுறுத்திய நிலையில் அதனை மீறிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழகத்திலேயே இதுவே முதல் முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments