கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு

0 41428

கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கதக்க நபர் சில தினங்களுக்கு முன்பு தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு உடலில் ஏற்கனவே சி.ஓ.பி.டி (COPD) என அழைக்கப்படும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்தன.

இதனால் நேற்று மாலை முதலே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்த நிலையில் நள்ளிரவில் எவ்வித பலனின்றி உயிரிழந்தார். இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 54 வயது நபர் அண்மையில் வெளிமாநிலங்களுக்கே, வெளிநாடுகளுக்கோ சென்று வந்தவர் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியான நாள் முதல் அவரது மனைவி மற்றும் மகன்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதைப்போன்று அவர் வழக்கமாக செல்லும் மசூதியில் அவருடன் நெருங்கி பழகியவர்கள், நெருங்கிய உறவினர்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே நடைபெற்று வந்தது. கடந்த 9ம் தேதி சுமார் 60 பேர் பங்கேற்று இருந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு இருந்தார்.

ஆகையால் அந்த 60 பேரையும் அடையாளம் காணும்பணி நடைபெற்று வந்தது. இதைப்போன்று தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 12 மதகுருமார்களை அவர் அண்மையில் சந்தித்து பேசியுள்ளார். அவர்களில் 2 பேர் தற்போது கொரோனா அறிகுறியுடன் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் உடல் பாதுகாப்புடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு நள்ளிரவிலே இறுதிச்சடங்கும் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments