கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு

0 5215

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பிய 65 வயது மூதாட்டி மும்பையிலுள்ள மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் பலியானதை அடுத்து இந்தியாவில், பலி எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 500ஐ எட்டியுள்ளது.

சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலகநாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது நாடு முழுவதும் 498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பிய 65 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலையில் புனேவில் 3 பேருக்கும், சதாராவில் ஒருவருக்கும் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நால்வரையும் சேர்த்து மராட்டியத்தில் 101 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

துபாயிலிருந்து திரும்பிய 25 பேருடன் சேர்த்து கேரளாவில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 276 மருத்துவர்கள் அரசுப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் பணியில் இணைய வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 51 மருத்துவக் கல்லூரிகளில் 4,500 பேரை தனிமைப்படுத்துவதற்காக படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றை வரும் வாரத்துக்குள் 11 ஆயிரம் படுக்கைகளாக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் புதிதாக பாதிப்புக்குள்ளான 2 பேருடன் சேர்த்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு நல்குமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 19ம் தேதி லண்டனிலிருந்து திரும்பிய 23 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மணிப்பூரில் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments