இன்று மாலை முதல் 144 தடை அமல்

0 3293

கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. கேரளா, கர்நாடக மாநில எல்லைகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.

கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தீவிரபடுத்தியுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. 144 தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை தொடர்ந்து இயங்கும்.  இதேபோல் அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.

அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

தமிழக கேரள எல்லை பகுதிகளான தேனி மாவட்டத்திலுள்ள கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. அப்பகுதிகள் வழியே மக்கள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் தேனி மாவட்டம் லோயர் கேம்பிலும், கம்பம்மெட்டு அடிவாரத்திலும், போடி முந்தல் சோதனை சாவடி அருகிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இரு மாநில எல்லை பகுதிகளை கடந்து செல்லும் அரசு வாகனங்கள் உள்ளிட்டவை மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழக கேரளா எல்லையான களியக்காவிளையில் சோதனைச்சாவடி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தமிழக -கர்நாடக எல்லை பகுதியான புளிஞ்சூர் வழியாக தமிழகம் வரும் கர்நாடக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. அங்குள்ள சோதனை சாவடியில் இருக்கும் கர்நாடக போலீஸார், தமிழ்நாட்டில் 144 தடை இன்று மாலை முதல் அமலுக்கு வருவதை சுட்டிக்காட்டி, தமிழகம் செல்ல வேண்டாம் என வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments