சொந்த ஊர் செல்ல மக்கள் கூட்டம்..!

0 4753

சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் ஏராளமான பயணிகள் குவிந்துள்ள நிலையில், நாளை மாலை வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

image

தமிழகம் முழுவதும் செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதால், சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்தனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயங்கி வருவதால் பொதுமக்கள் அவதிஅடைந்துள்ளனர்.

image

இதேபோல் வெளிமாவட்டங்களுக்கு செல்ல தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் குவிந்தனர். இதனால் அங்கிருந்து மாநகர பேருந்துகள் திருச்சி விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் கும்பகோணம், திண்டிவனம் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

image

இதற்கிடையே செவ்வாய்கிழமை மாலை வரை பேருந்துகள் இயங்கும் என்றும், மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்குமாறும், போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் இருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கொரோனா அச்சத்தால் சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணிகள் ஆர்வம் காட்டி வருவதால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாவதால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 

தனியார் நிறுவன தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமானதால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கையாக  மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் நிலையில், இம்மாவட்டத்தில் பின்னலாடை உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் மார்ச் 31ம் தேதி மூடப்பட்டுள்ளது. இதனால், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்திருந்தது. 

ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் 144 அமலுக்கு வருவதால், பயணிகள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இங்கிருந்து, சேலம், மதுரை நாமக்கல், குமரி உள்ளிட்ட இடங்களுக்கு வழக்கத்தை விட குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறியதுடன், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments