கொரோனா -செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்...

0 16460

கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்கவும் பரவாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.....

கொரோனா வைரஸ் பரவிவருவதைத் தடுக்கவும் நம்மை நாமே தற்காத்துக் கொள்ளவும் என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் விளக்கி வருகின்றனர். பல்வேறு வதந்திகள், போலி மருந்துகள் ஒருபுறம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும் சில முக்கியமான கருத்துகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

முகக் கவசம் அணிதல் -கொரோனாவால் பாதிக்கப்படாதிருக்க முகக் கவசம் அணிவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஆனால் முகக் கவசம் என்பது நம்மிடமிருந்து பிறருக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காகத்தான் பயன்படுகிறது. வைரஸ் நம்மை தாக்காமல் காப்பதில் அந்த முகக் கவசங்கள் அதிகமான உதவி செய்யாது.

மருத்துவமனைக்கு எப்போது செல்ல வேண்டும்? சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைகளுக்கு ஓட வேண்டிய அவசியமில்லை.

நீண்ட நேரம் அங்கு காத்திருக்க நேரிடலாம் என்பதுடன் காத்திருப்பவர்களிடமிருந்தும் நமக்கு நோய் தொற்றிக் கொள்ளலாம். கடந்த 15 நாட்களுக்குள் வெளிநாடு சென்றிருந்தாலோ அல்லது சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ காய்ச்சல் சளி போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டில் இருந்தே சாம்பிள்களை சேகரிக்க மருத்துவமனைகளுக்கு போன் மூலம் தகவல் அளிக்கலாம் .குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வீட்டிலேயே உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

பரிசோதனைகளுக்காக மட்டும் மருத்துவமனைகளுக்கு செல்லலாம். நீண்ட வரிசையில் நிற்க நேர்ந்தால் சற்று விலகியிருக்கலாம். முகக் கவசம் அணியலாம். சானிட்டைசர்களை கையில் எடுத்துச் செல்லலாம்.

கடந்த சில நாட்களில் நீங்கள் சந்தித்த அனைவரிடமும் உடல் நலம் சரியில்லை என்பதைத் தெரிவியுங்கள். வீட்டில் குடும்பத்தினருடன் சுமார் 6 அடி தூரம் விலகியிருங்கள். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோரை நெருங்கக் கூடாது.

கதவுகளின் கைப்பிடிகள் ,மின்சார ஸ்விட்சுகள் போன்ற, நாம் அடிக்கடி கையால் தொடும் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களிலும் தொற்று பரவாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.முடிந்தால் தனி பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

வாட்ஸ் ஆப், சமூக ஊடகங்கள் கூறுவதை முழுவதுமாக நம்பி விடாமல் அவ்வப்போது மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. நிறைய தண்ணீர் குடித்து நிறைய நிறைய ஓய்வு எடுக்க வேண்டும்.

மிகக் குறைந்த அளவிலேயே நோயால் தீவிரமாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 5 முதல் 7 நாட்களுக்குள் நோய் குணமாகாவிட்டால் பதற்றப்பட வேண்டாம் . குணமாகி விடுவோம் என்று நம்புங்கள். வேறு யாருக்கும் நோய் பரவாமல் பாதுகாப்பாக இருங்கள்.

உங்கள் உடல்நிலையைப் பொருத்து அவசியமானால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி வெண்டிலேட்டர், ஆக்சிஜன் உதவியை நாடுங்கள். மூச்சு விடுவதில் சிரமப்படுவோருக்கு இது முக்கியமானது.

வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள், இருதய நோய் உள்ளவர்கள் , ஆரோக்கியம் குறைந்தவர்கள் இரண்டாவது நாளே மருத்துவமனைக்கு செல்வதும் மருத்துவர்களின் ஆலோசனையை கவனமாக கடைபிடிப்பதும் அவசியமாகும்.

கொரோனா வைரஸ் தாக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே இருப்பினும் நோய் வந்தால் அதை ஒரு வாரத்தில் போராடி வென்று குணமாகக் கூடிய வாய்ப்பு உள்ளதையும் நினைவில் கொள்ளுங்கள். நோயை உருவாக்கிய சீனாவே அந்த நோயிலிருந்து விடுபட முடியும் என்பதையும் நமக்கு உணர்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments