நடிகர் விசு காலமானார்..!

0 23026

சம்சாரம் அது மின்சாரம், நீங்க நல்லா இருக்கனும் உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய குடும்ப இயக்குனர் விசு காலமானார். இன்றைய தொலைக்காட்சி தொடர்களுக்கு முன்னோடியாக திரைப்படங்களை தந்த வித்தகர் விசுவின் கலைப்பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பயிற்சி பட்டறையில் இருந்து வந்தவர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வ நாதன் என்கிற விசு..!

பட்டினபிரவேசம் படத்தின்மூலம் கதாசிரியராக அறிமுகமான விசுவுக்கு 1981ல் வெளியான ரஜினியின் தில்லுமுல்லு படம் நல்ல பெயரை பெற்று தந்தது.

கீழ்வானம் சிவக்கும், குடும்பம் ஒரு கதம்பம் போன்றபடங்களில் கதையாசிரியராக முத்திரை பதித்த விசு, கண்மணி பூங்கா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானாலும் திருமணத்துக்கு 10 நிபந்தனை போடும் மணல்கயிறு படம் மூலம் இயக்குனராக பிரபலம் ஆனார்.

இதற்கு இடையே விசுவின் எழுத்தின் உருவான நெற்றிக்கண் படம், ரஜினிகாந்தின் திரைஉலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து விசுவின் கதையில் ரஜினி நடித்த புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத் போன்ற படங்களும் ரஜினியின் திரை பயணத்தில் வெற்றி மகுடமாய் அமைந்தது.

எஸ்.வீ சேகரை வைத்து சிதம்பர ரகசியம் சொல்லவைத்து வயிறு குலுங்க சிரிக்கவைத்தவர் விசு..!

1986 ல் விசுவின் கதை வசனம், இயக்கத்தில, பிரமாண்ட செலவுகள் இன்றி பட்ஜெட்டில் எடுத்த சம்சாரம் அது மின்சாரம் படம், குடும்ப உறவுகளின் துரோகங்களையும் தியாகங்களையும் உறக்கச்சொல்லி, பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி திரையரங்குகளை மக்கள் வெள்ளத்தால் நிரப்பியதோடு தேசிய விருதையும் வென்றது.

ஏ.வி.எம் தயாரித்த இந்த படத்தின் வெள்ளி விழாவில் இயக்குனர் விசுவுக்கு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் வெள்ளியிலான பெரிய வெற்றிக்கோப்பையை வழங்கி கவுரவித்தார்.

விசுவின் இயக்கத்தில் வெளியான நீங்க நல்லா இருக்கனும் என்ற படமும் தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன்,பெண்மணி அவள் கண்மணி, வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை என படத்தின் தலைப்பை எதுகை மோனையுடன் வைத்து நக்கல் கலந்த திரைக்கதையுடன் கூடிய குடும்ப படங்களை இயக்கி மக்களை கவர்ந்தவர் கலைவித்தகர் விசு..!

இடையிடையே தன் படம் மட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வந்த விசு ரஜினியின் மன்னன், உழைப்பாளி, அருணாச்சலம், அஜீத்துடன் ஜீ, அர்ஜூனுடன் அடிமை சங்கிலி,மன்னவரு சின்னவரு, வானவில், சத்யராஜூடன் மகாநடிகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

90 களின் இறுதியில் படவாய்ப்புகள் குறைந்ததால் டிவியில் அரட்டை அரங்கங்களை நடத்திவந்த இயக்குனர் விசு, தொடர்ந்து சில படங்களில் முதல்வர் கவர்னர் போன்ற கவுரவ வேடங்களை ஏற்று நடித்து வந்தார்.

தனது திரைபயணத்தில் திருப்புச்சீட்டாக இருந்த சகோதர் கிஷ்முவின் மரணத்தால் மனரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்ட விசு, தனது மணல் கயிறு படத்தை ரீமேக் செய்வதில் ஈடுபட்டிருந்த போது சிறு நீரக கோளாரால் ஏற்ப்பட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அதனை தொடர இயலாமலும் பணமுடையாலும் தவித்துவந்தார். அண்மையில் இயக்குனர் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி தனது கதையை தனக்கு தெரியாமல் விற்றுவிட்டதாக கூறி துரோகம் இளைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டி வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.

இன்று வீட்டுக்குள் இருந்து சின்னத்திரையில் பெண்கள் ரசிக்கும் பல மெகா தொடர்களை அன்றே கதம்பமாக தொடுத்து குடும்பமாக பெண்களை திரையரங்குகளுக்கு ஈர்த்த பன்முக கலைஞர் விசு மறைந்தாலும் அவரது படைப்புகளால் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments