இன்று 14 மணி நேர "மக்கள் ஊரடங்கு"

0 4350

130 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்ட இந்தியாவில் நாடு தழுவிய 14 மணி நேர மக்கள் ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் சுய ஊரடங்கை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாநில எல்லைகள் யாவும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

அநாவசியமாக யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அவரவர் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்றும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு கூடுவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நோயைப் பரப்பிவிடும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

சுய ஊரடங்கு என்பது கட்டாயமில்லை என்ற போதும் இன்று ஒருநாள் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி, லக்னோ போன்ற சில முக்கிய நகரங்கள் நேற்றே வெறிச்சோடி காணப்பட்ட போதும் மக்கள் அதிக அளவில் உள்ள மும்பை போன்ற நகரங்களில் ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட நேற்று அதிக அளவில் கூட்டம் கூடியது. மக்கள் கூட்டத்தை சமாளிக்க 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மும்பையில் இன்று மின்சார ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் ஓடுகின்றன.

தமிழ்நாட்டில் இன்று பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் பால் விற்பனை நிறுத்தம், கடைகள் அடைப்பு என முழு ஆதரவையும் வணிகர்கள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தை இன்று ஒருநாள் மூடப்படுகிறது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

புதுச்சேரியிலும் இன்று மக்கள் ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு, மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் அவை வழக்கம் போல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற சிகிச்சைகளுக்காக மக்கள் மருத்துவமனைகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் மருத்துவர்களுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு அடைப்புக்கு மக்கள் முழுமையான ஆதரவளிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். சுய ஊரடங்கு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட மோடி, மக்கள் அனைவரும் இன்று ஒரு நாள் வீடுகளில் இருந்து ஆரோக்கியமாக வாழலாம் என்று தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 என்ற கொடிய நோய்க்கு எதிராகப் போராட இந்த மக்கள் ஊரடங்கு மிகப்பெரிய வலிமையைக் கொடுக்கும் என்றும் , இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments