நாளை மக்கள் ஊரடங்கு..!

0 2973

பிரதமர் மோடி நாளை மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்துகள் ஓடாது. ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் இயங்காது, பால் விநியோகமும் பெரும்பாலும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கை கட்டுப்பாட்டுடன் அமல்படுத்திக் கொள்வோம் என தமிழக கால்டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வாகனங்களை இயக்கமாட்டோம் என உறுதிபூண்டு கொரோனாவை வென்றெடுப்போம் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக்  பார்களை வரும் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு கூட்டம் சேர்வதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுதும் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயங்காது என மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை தமிழகம் முழுவதும் அனைத்து சரக்கு லாரிகளையும் இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்க உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் வாங்கிலி தெரிவித்தார்.

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 22-ஆம் தேதி இரவு 10 மணி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 22-ஆம் தேதி காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பெரும்பாலான நீண்ட தூர மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்களும் இயக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் அத்தியாவசியத் தேவைகளை கருத்தில் கொண்டு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுத்துவதாக கிரேட்டர் தமிழ்நாடு குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்கள் தேவையான குடிநீரை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் அனைத்தும் இயங்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்துகளின் உரிமையாளர்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நாளை ஒரு நாள் நிறுத்தி வைக்கப்படுவதாக அதன் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து காக்க மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருப்பதையும், சமூகத் தனிமையையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments