கொரோனா பரவலைத் தடுக்க... பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்.!

0 651

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், சென்னையில் கொரோனா குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாமல் ரெயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் உட்பட பொது இடங்களில் காணப்படும் பொதுமக்களின் நடமாட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொடிய தொற்றாக கருதப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து இல்லை, ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதன் மூலமே கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் நடவடிக்கையில் அரசு நிர்வாகம் இறங்கியுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு போதமான அளவு இல்லை என வேதனை தெரிவிக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னையில் கொரோனா வைரஸ் விபரீதத்தை உணராத பலரும் விடுமுறை நாட்களில் பயணிப்பது போல் அவரவர் ஊர்களுக்கு சென்றுவிடலாம் என பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு படையெடுக்கின்றனர்.

வட மாநிலங்கள் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால், நூற்றுக்கணக்கான வட மாநில இளைஞர்கள் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். வெளியூர்களில் இருந்து வருபவர்களை விட சென்னையில் இருந்து புறப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் அனைத்து வகையான தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டால் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் கொரோனா தொற்று சமுதாய தொற்றாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்ப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார்

இந்த கொடிய வைரஸ் தொற்று குறித்த போதுமான கவனம் செலுத்ததன் விளைவை உலகின் வளர்ந்த நாடுகள் பல தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் சுயக்கட்டுபாட்டுடன் இருந்தால் மட்டுமே இவற்றை எதிர்கொள்ள முடியும் என்பதே நிதர்னசம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments