நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் 2 மணி நேரத்திற்கு முன்பு வரை நடந்த சட்ட போராட்டம்..!

0 11042

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்புவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற சட்டப்போராட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

2012ல் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. அதனை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சட்டப் போராட்டத்தின் முடிவாக 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனையிலிருந்து தப்பிக்க, குற்றவாளிகள் தரப்பில் பலவிதமான காரணங்களைக் காட்டி இழுத்தடிப்பு செய்தபோதும்,
சட்டப்படியான வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்பட்டன

தனித்தனியாக சீராய்வு மனு, கருணை மனு, மேல்முறையீட்டு மனு போன்றவற்றை தாக்கல் செய்து மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முயன்ற நிலையில், குற்றவாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நீதிமன்றத்தாலும், குடியரசுத் தலைவராலும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன.

குற்றவாளிகள் தூக்கிலிடப்பட சில மணி நேரங்களே இருந்த நிலையில், அவர்கள் தரப்பில் மரன தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, "குற்றவாளிகள் கடவுளைச் சந்திக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. இதனிடையே, இரவு 10 மணியளவில் உங்கள் தரப்பு நியாயத்தை கேட்க நாங்கள் இங்கு வந்துள்ளோம், ஆகையால் முக்கியமான பாயிண்டுகள் ஏதேனும் இருந்தால் கூறுங்கள்" என நீதிபதிகள் குற்றவாளிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தினர்

ஆனால், குற்றவாளிகள் தரப்பில் ஆவணங்களை சமர்பிக்க 2 நாட்கள் அவகாசம் கேட்கவே, மனுத்தாக்கல் செய்யும்போதே அதில் உண்மையான தகவல்களை இணைத்திருக்க வேண்டும்' எனக் கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து இறுதி முயற்சியாக, குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி பவன்குப்தா சார்பில் உச்சநீதிமன்றத்த்தில் அதிகாலை 2 மணியளவில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சில மணி நேரத்தில் தூக்கிலிடப்பட உள்ளதை கருத்தில் கொண்டு, நள்ளிரவு 2.30 மணியளவில் நீதிபதி பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனு மீதான விசாரணையைத் தொடங்கியது.

அப்போது, ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட காரணங்களையே தங்களால் மீண்டும் மீண்டும் கேட்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குடியரசுத்தலைவரின் முடிவு நேர்மையான முறையில் எடுக்கப்படவில்லை, மேலும், அவர் திறந்த அல்லது சரியான மனநிலையில் இந்த முடிவை எடுக்கவில்லை எனவும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையேற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

4 பேரும் குற்றவாளிகள் என இறுதி செய்யப்பட்ட நிலையிலும் சட்டத்திற்குட்பட்டு அவர்களது கோரிக்கைகள் அனைத்தையும் விசாரித்துள்ளது நீதித்துறை. ஒவ்வொரு முறை குற்றவாளிகளின் மனுக்களை நிராகரித்தபோதும் அடுத்தடுத்து நீதிமன்றங்களில் மனுக்களை தாக்கல் செய்துகொண்டே இருந்தனர். குற்றவாளிகள் தரப்பில் எந்த ஒரு நிலையிலும் துளியும் நியாயம் இல்லை என்பதை, மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்திய நீதித்துறை, இறுதியில் அப்பாவிப் பெண்ணுக்கு அவர்கள் செய்த பாவத்தின் பலனை உணரச் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments