கோவில்களுக்கு வர பக்தர்களுக்கு தடை..!

0 2007

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் 31ம் தேதி வரை சுவாமி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோயில்களிலும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

சென்னையிலுள்ள பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோவில்களில் வழக்கம் போல பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், தேவராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சுவாமி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோவில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவில், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட திருச்சியிலுள்ள முக்கிய கோவில்களில் இன்று முதல் 31-ஆம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயில்களின் 4 பிரதான நுழைவு வாயில்களிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கூடழலகர் பெருமாள் கோவிலிலும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயம் மூடப்பட்டு, அதுதொடர்பாக நுழைவு வாயிலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. ஆலயத்தில் நடைபெறும் திருப்பலிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் இன்று காலை 8 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிகாலை வந்த பக்தர்கள் வெளியேறியதும் வெளிப்பிரகார வாயில் கதவு மூடப்பட்டது. அர்ச்சகர்கள் மட்டும் வழக்கமான பூஜைகள் மேற்கொண்டனர். இதனால் கோவில் வெறிச்சோடியது. 

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு வந்த பக்தர்களை ஊழியர்கள் திருப்பி அனுப்பிவருகின்றனர்.

காவடி எடுத்து வந்த பக்தர்கள் அடிவாரத்திலேயே நேர்த்திக்கடன் செலுத்தி திரும்பினர். இதேபோல் மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி முருகன் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.

பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்றுமுதல் தரிசனம் நிறுத்தப்பட்டது. மேலும் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனல் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பட்டதால் கோவில் முன்பு தேங்காய் உடைத்து விரதம் முறித்துச்சென்றனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகாமாரியம்மன் உள்ளிட்ட ஆலயங்களிலும் பக்தர்கள் தரிசனம் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பங்குனி திருவிழாக்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு வழக்கமான பூஜைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பக்தர்கள் கோயிலின் வெளிப்பகுதியில் நின்று அம்மனை வேண்டி நேர்த்தி கடன் செலுத்தி சென்றனர்.

 

இதே போல் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு வெளிப்பிரகார வாயில் மூடப்பட்டது. இதனால் மாட வீதிகள் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments