கொரோனாவை விரட்டுவோம் - பிரதமர் மோடி அறைகூவல்..!

0 20118

கொரோனா தடுப்பில் சமூக விலகியிருத்தல் மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதற்காக வரும் 22 ஆம் தேதி, மக்கள் ஊரடங்கு எனப்படும் சுய கட்டுப்பாட்டை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகைச் சுற்றி வரும் கொரோனா தாக்குதல் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் கொரோனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள அச்சம், முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.

அப்போது, வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்ட பிரதமர், பீதியால் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு கடைகளில் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். பால், உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ளும் என்றார் அவர்.

கொரோனாவால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறிய மோடி, அது தொடர்பான சவால்களை சமாளிப்பதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் கோவிட்-19 விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்றார்.

கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள பல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வரும் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் கைதட்டி ஒலி எழுப்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வராமல் இருப்பது நல்லது என்ற மோடி, 130 கோடி இந்தியர்களும் சேர்ந்து கொரோனாவை கட்டுப்பாட்டுடன் சமாளித்து விடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலால் பலர் பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதற்காக அவர்களின் ஊதியத்தை தனியார் நிறுவனங்கள் குறைக்கக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். அதே போன்று மிகவும் அவசரம் இருந்தால் ஒழிய மருத்துவமனைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், முடிந்தால் அறுவை சிகிச்சை போன்றவற்றை ஒரு மாத காலம் வரை தள்ளி வைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

கொரோனா ஒழிப்பு என்பது உலகப் போர் காலங்களை விட கொடியது என்ற மோடி, அப்போது நடைமுறையில் இருந்த இருட்டடிப்பு காலங்களில் மக்கள் பொறுமை காத்ததையும் நினைவு கூர்ந்தார். கெரோனாவுக்கு எதிரான போரில் மனிதநேயம் மற்றும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

வரும்  22 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் சமூக விலகியிருத்தல், நமது திறமை, கட்டுப்பாடுக்கான ஒரு சோதனை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த தகவலை 10 பேருக்காவது தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments