படுத்து போராடிய பங்கு தந்தையின் தலையில் "நச்"..! மொத்த நிலமும் ஆக்கிரமிப்பு

0 26539

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தேவாலய வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து படுத்து கிடந்து பாதிரியார் போராடிய நிலையில், தேவாலய வளாகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இடமும் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாகவும், அவற்றை 6 மாத காலத்திற்குள் அகற்றவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்ற உன்னத தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய கிறிஸ்துவை பின்பற்றும் பாதிரியார் அமலன் தலைமையிலான குழுவினர் தேவாலய வளாகத்தில் , தங்களது பட்டா நிலத்தில் அரசு கட்டிடம் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று ஆவேசமாக நடத்திய போராட்ட காட்சிகள் தான் இவை..!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவகத்திற்கு புதிதாக கட்டடம் ஒன்று தேவாலய வளாகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைய உள்ளது என்பதை தெரிந்தும், ஒட்டு மொத்த இடமும் தேவாலயத்துக்கு சொந்தமானது என்றும் அங்கு அரசு கட்டிடம் கட்ட தடைவிதிக்க கோரியும் பாதிரியார் அமலன் , உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் எந்த ஒரு நில உரிமை ஆவணங்கள் இன்றி தேவாலயம் ,பள்ளிக் கட்டிடம், விளையாட்டு மைதானம், மற்றும் மறுவாழ்வு மையம் என அனைத்துமே அரசுக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து செயல்பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

60 ஆண்டுகளாக அனுபவித்து வந்த அரசுக்கு சொந்தமான இடத்திற்கு தனியார் உரிமை கொண்டாட முடியாது என்றும் அந்த பாதிரியார் சமர்ப்பித்த பட்டா செல்லாது என்றும் அறிவித்த நீதிமன்றம் இன்னும் 6 மாத காலத்திற்குள் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிரடியாக உத்தரவிட்டது.

8 வருடங்களுக்கு முன்னரே அந்த வளாகத்தில் செயல்பட்டு வந்த பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், தற்போது அங்கு திருமண மண்டபம் ஒன்றும், தேவாலயம் மற்றும் கன்னியஸ்திரிகள் இல்லம் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் நீதி மன்றத்தில் அங்கு பெண்கள் பள்ளிக்கூடம் மற்றும் விளையாட்டு மைதானம், மற்றும் ஆர்.சி.மயானம் இருப்பதாக பாதிரியார் தரப்பில் தவறான தகவல் அளிக்கப்பட்டு இருந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்க ஆணை பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்ட இடையூறு செய்யாமல் அமைதியாக இருந்திருந்தால், ஒட்டு மொத்த இடமும் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்திருக்காது என்றும் பாதிரியார் அமலன் வழக்கு தொடர்ந்ததாலேயே, அரசு நிலத்தை ஒட்டு மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்து இருந்த ரகசியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments