காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியாவுக்கு விமானங்களை வாங்கியதில் முறைகேடு? - அமலாக்கத்துறை விசாரணை

0 233

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 111விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2005ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு போயிங் நிறுவனத்திடமிருந்து 68 விமானங்கள் விலைக்கு வாங்கப்பட்டன. இதேபோல் 2006ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்கள் வாங்கப்பட்டன.

நிர்வாகச் செலவைக் குறைப்பதாகக் கூறி 2007ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஏர்லைன்ஸ் இணைக்கப்பட்டது. ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்சுமையால் தத்தளிக்கும் ஏர் இந்தியாவால் தொடர்ந்து இழப்பு ஏற்படுவதாகக் கூறி அதன் 76விழுக்காடு பங்குகளை விற்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதனிடையே ஏர் இந்தியாவின் கடனுக்கும் இழப்புக்கும் என்ன காரணம் என்பதை விசாரிக்கக் கோரி அரசு சாரா அமைப்பு ஒன்று 2017ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க சிபிஐக்கு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் ஏர் இந்தியா, விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் மீது 3 வழக்குகளைப் பதிவு செய்தது.

எழுபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 111 விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றது குறித்து ஒரு வழக்கும், புதிய விமானங்களைக் கொள்முதல் செய்யும் பேச்சு நடைபெற்று வந்தபோதே விமானங்களைக் குத்தகைக்கு வாங்கியது குறித்து மற்றொரு வழக்கும், லாபம் தரும் வழித்தடங்களைத் திட்டமிட்டுத் தனியாருக்கு விட்டுக்கொடுத்தது குறித்து 3வதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்புக் குறித்த விசாரணையையும் சிபிஐ நடத்தியது. விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்க மற்றும் இந்திய வங்கிகளில் நிதியுதவி பெற்றதும் ஏர் இந்தியா கடனில் மூழ்கக் காரணம் என சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணையை அடுத்த 6மாதங்களில் முடிக்குமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து இது தொடர்பான ஒப்பந்தங்கள், அவற்றைச் செயல்படுத்திய முறை, தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடையும் வகையில் கொள்கை முடிவெடுத்தது ஆகியவை பற்றி அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments