கொரோனா முன்னெச்சரிக்கை-தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டன

0 755

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவையடுத்து, தமிழகத்தில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளன. 

காஞ்சிபுரத்தில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோயில், வைகுந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவுப்புகளும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள 10 புராதன சின்னங்களும் மூடப்பட்டன. 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. வழக்கமாக பவுர்ணமி, அமாவாசைக்கு 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அமாவாசைக்கு பக்தர்கள் கூடுவார்கள் என்கிற நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற குடவறை கோவில்களான நரசிம்மசுவாமி - நாமகிரி தாயார் திருக்கோவில், மற்றும் அரங்கநாதர் திருக்கோவில்களும், மலைக்கோட்டையும் மூடப்பட்டன. மேலும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெப்பமானி சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இங்கு முக்கிய ஜவுளி கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

மத்திய தொல்லியல்துறை உத்தரவையடுத்து யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் இன்று மூடப்பட்டது. வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு ஒட்டப்பட்டு, கோவில் பிரகாரம் மற்றும் புல்வெளி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments