இத்தாலியின் லாக்-அவுட்....6 கோடி மக்கள் வீட்டுக்குள் அடைப்பு -வேறு வழியில்லையா?

0 5960

இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு தான் வழியா என்று மருத்துவர்களால் உறுதி செய்ய முடியாத போதும் வேறு வழியில்லை என்கின்றனர்

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அது போன்றதொரு நெருக்கடியை நான்காவது வாரமாக தொடர்ந்து இத்தாலி சந்தித்து வருகிறது. கண்ணுக்கு எட்டிய வரை இதற்கு முடிவே தெரியவில்லை. சுமார் 6 கோடி மக்கள் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

அவர்களால் தாங்க முடியாத அளவுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. கடைகள் சீக்கிரமாகவே அடைக்கப்பட்டு விடுகின்றன. அதிக அளவில் போலீசார் வீதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியே நடமாடும் குடும்பத்தினரை வீட்டுக்குள் விரட்டி விடும் பணியை அவர்கள் செய்து வருகின்றனர். அவசியமில்லாமல் யாரும் நடமாடக்கூடாது என்பது அவர்களின் இலக்கு. இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அப்படியும் அதிகரித்தவண்ணம் தான் உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிதாக 3500 பேர் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2500 ஐ கடந்துவிட்டது.

நாட்டின் வடக்குப்பகுதியில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. உயிரிழந்தவர்கள் குவியல் குவியலாக புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதே போன்று மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் வயல்பரப்புகளிலும் மருத்துவமனை முற்றத்திலும் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது.மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நோய்த் தொற்று பரவி வருகிறது. 

மக்களை வீட்டில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தொற்று நோய் நிபுணர்கள், மருத்துவர்கள் கூறுகின்றனர்.  முன்னதாகவே இதனை செயல்படுத்தியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். தனிமைப்படுத்தி வைத்திருப்பதே முக்கியமானது என்றும் இதனை அரசியலாக்கக் கூடியவர்களும் இத்தாலியில் அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர்களின் கைகளில்தான் இத்தாலியின் எதிர்காலம் இருக்கிறது.

இத்தாலியில் இந்நோயை வென்று விட்டால் ஐரோப்பாவிலும் உலகிலும் வென்று விடலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.கோடிக்கணக்கான மக்களை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதால் இத்தாலியின் சுற்றுலா, பொருளாதாரம் , ஜனநாயகம் எல்லாமே சரிவை சந்தித்து வருகிறது. சிறிய தொழில்கள் யாவும் அழிந்து வருகின்றன. மக்கள் வாங்கிய கடன்களை வங்கிகளுக்கு செலுத்த முடியாத நிலை உள்ளது. வங்கிகளுக்கு பெரும் நிதியுதவி தேவைப்படுகிறது. இதனிடையே இத்தாலி மேலும் பல புதிய பிரச்சினைகளையும் பல புதிய நோயாளிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments