கொடிய போர் கொரோனா... விழிப்புடன் இருப்போம்..விரட்டி அடிப்போம் !

0 2287

கொரோனா வைரஸ் தொற்று பரவலை, கொடிய போர் என வர்ணித்துள்ள மருத்துவ நிபுணர்கள், பாதிப்பில் இருந்து தப்பிக்க, பல்வேறு யோசனைகளை பட்டியலிட்டு உள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அலசுகிறது, இந்த சிறப்பு செய்தி...

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பல் விழுந்த முதியவர்கள் வரை, அனைத்து தரப்பினரையும் கொரோனா பீதி ஆட்டி படைத்து வருகிறது. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, நலமா என கேட்பது மாறி, கொரோனாவுக்கு இன்று எத்தனை பேர் பலி? என அறிந்து கொள்ள ஆர்வம் காட்டும் சூழல் உருவாகி உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரித்துக்கொண்டாலே, கொடிய கொரோனாவை ஓட, ஓட விரட்டி அடிக்க முடியும் என்கிறார், சென்னை - ஓமந்தூரரார் அரசு பல்நோக்கு உயர் மருத்துவமனை யின் உணவியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி.

விழிப்புடன் இருந்தால், கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என கூறும் அவர், ஹோட்டல்களில் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தால், உடனடியாக அதனை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வைட்டமின் சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருந்தால், கொரோனா மட்டுமல்ல - எந்த கொடிய நோயும் நம்மை அணுகாது என விளக்கம் அளித்த மருத்துவ நிபுணர்கள், பெரிய நெல்லிக்காய், கொய்யா, தக்காளி, குடமிளகாய், கீரை வகைகள், கருப்பு திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரி, மீன் வகைகள், மாம்பழம், பப்பாளி ஆகியவை, ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல உணவுகள் என பட்டியலிட்டனர்.

வீடுகளில் சட்னி தயார் செய்வதை தவிர்க்குமாறு, யோசனை தெரிவித்த உணவியல் நிபுணர்கள், தயிர் சாப்பிடுவதை அறவே நிறுத்துமாறு, மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

சர்க்கரை வள்ளி கிழங்கு, பனங்கிழங்கு உள்ளிட்ட பல வகை கிழங்குகளும், திணை, கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளும் ஆரோக்கிய உணவு பட்டியல் என அறிவித்துள்ள உணவியல் நிபுணர்கள், இவைகளை சாப்பிட்டால், நலமுடன் வாழலாம் என தெரிவித்தனர்.

வீடுகளை பொறுத்தவரை, எந்தவகை உணவை எடுத்துக்கொள்வதாக இருந்தாலும், மறக்காமல் இஞ்சி - பூண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள் என டாக்டர்கள், யோசனை தெரிவித்தனர்.

 ஒவ்வொருவரையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, உலக நாடுகள் பல, சக்திவாய்ந்த மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில்,தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

உணவே மருந்து - மருந்தே உணவு என்பதை நிரூபிக்கும் வகையில், கொரோனா என்ற கொடிய போரை எதிர்கொள்ள, நாம் ஒவ்வொருவரும் தயாராக இருப்பது காலத்தின் கட்டாயம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments