கொரோனா தொற்றை தவிர்க்க எப்படி உதவுகிறது "Social distancing"..!

0 1595

உலகையே மிரள வைத்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி விடாமல் மக்களை காக்க, உலக நாடுகள் பலவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று Social distancing எனப்படும் சமூக விலகல் நடவடிக்கை ஆகும்.

சர்வதேச அளவில் 7,100-க்கும் மேற்பட்டோரும், இந்தியாவில் 3 பேரும் கொலைகார கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் மிக வீரியமாக பரவி அச்சுறுத்துவதால், இதிலிருந்து காக்கவே பொதுவெளி சமூகத்திலிருந்து மக்களை விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

Social distancing எனப்படுவது மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சுகாதார அதிகாரிகளால் செயல்படுத்தப்படும் நடைமுறையாகும். வைரஸ் பரவலை தடுப்பதும், குறிப்பிட்ட நோய் தொற்றிலிருந்து வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை பாதுகாக்கும் வகையிலும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Social Distancing எனப்படும் சமூகத்தில் இருந்து விலகி இருப்பதன் மூலம், அதாவது ஒருவரை விட்டு ஒருவர் குறிப்பிட்ட தூரம் விலகி இருந்தால் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். எனவே தான் பல உலக நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன. சமூக விலகல் நடவடிக்கையின் பகுதியாக தான் மாணவர்கள், தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானவர்களை வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க பள்ளிகள், அலுவலகங்கள், திரையரங்குகளை மூடுமாறு நம் நாட்டில் உள்ள பல மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

Social Distancing குறித்து கூறியுள்ள நிபுணர்கள் மக்கள் ஒருவருக்கொருவர் குறைந்தது 6 அடி அதாவது சுமார் 2 மீட்டர் தொலைவில் இருக்க முயற்சிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். குறைந்தபட்சம் ஒருவருக்கொருவர் 6 அடி தொலைவு தள்ளி இருந்தால், ஒருவேளை தொற்று பாதித்தவர் நம் அருகில் இருக்கும்பட்சத்தில் அவரது மூச்சு, வாய்ப்பகுதியில் இருந்து சளி, இருமல் வழியாக வெளியாகும் கொரோனா வைரஸ் நம்மை அணுகாமல் தடுக்க இயலும்.

ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ அல்லது தும்மும்போது, வெளியாகும் நீர்த்துளிகள் தரையில் விழும் முன் 3 முதல் 6 அடி (1 முதல் 2 மீட்டர்) வரை பயணிக்கின்றன என கூறியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள். எனவே இருமல் அல்லது தும்மலை கைக்குட்டை அல்லது tissue paper மூலம் தடுக்க முயற்சிப்பது முக்கியம் என கூறப்பட்டுள்ளது.

அதே போன்று இருமல், மூக்கில் நீர் வடிதல் இருப்பவர்கள் டிஷ்யூ அல்லது கைக்குட்டையால் அவற்றை கட்டுப்படுத்துவதும் முக்கியம். சமூக விலகி இருத்தல் நடைமுறையில் போது இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்லவே கூடாது.

அதே போல உணவு விடுதிகளுக்கு செல்பவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலகி அமர்வது நல்லது. கூட்டமாக இருக்கும் நேரங்களில் சூப்பர்மார்க்கெட்டுகளுக்கு போக வேண்டாம். வெளியில் இருந்து வீடு திரும்பிய பின்னர் கை மற்றும் கால்களை நன்கு கழுவுவது முக்கியம். திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் 10-க்கு அதிகமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments