இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு மேலும் ஒருவர் பலி

0 11314

இந்தியாவில், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நோய்க்கு, இன்று மூன்றாவது மரணம் நிகழ்ந்திருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மலேசியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு மத்திய அரசு பயணத் தடை விதித்துள்ளது. 

இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்களால், கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகப்பட்சமாக மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் 39 பேரும், கேரளாவில் 26 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை, 137ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 24 பேர் வெளிநாட்டினர்.

இந்தச்சூழலில், கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன், மும்பை கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 63 வயது முதியவர், சிகிச்சை பலனின்றி, இன்று காலையில் உயிரிழந்தார். இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நிகழ்ந்த 3ஆவது மரணம் இதுவாகும்.

துபாயிலிருந்து அந்த முதியவர் கடந்த 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால், தனது வெளிநாட்டு பயணத்தையும், தமக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு அறிகுறிகளையும் மறைத்துவிட்டதால், அது தீவிரமடைந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி தான் அவற்றை இனங்கண்டு, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தியதாக, மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை, மகாத்மா காந்தி நினைவகம், குதுப்மினார் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மூடப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில், மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் அனைவரும், உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, உலக பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில், மறு தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இருந்து கேரளா வந்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை சந்தித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், டெல்லி திரும்பிய நிலையில், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வர பயணத் தடை விதித்துள்ள மத்திய அரசு, இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments