கொரோனா வைரஸ்: இந்தியாவில் 126 பேர் பாதிப்பு

0 3093

மகாராஷ்டிரா (7) கர்நாடகா (2) தெலுங்கானா (1) கேரளா (1) ஆகிய மாநிலங்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி இந்தியாவில் வெளிநாட்டினர் 17 பேர் உள்பட 114 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் வெளிநாட்டினர் 3 பேர் உள்ளிட்ட 7 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

கர்நாடகத்தில் பிரிட்டன் சென்று வந்த 20 வயது இளம்பெண், ஹைதராபாத்தில் உயிரிழந்த கலபுர்கி முதியவரோடு தொடர்பு கொண்ட 60 வயது மூதாட்டி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

தெலுங்கானாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கேரளாவில் வெளிநாட்டினர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நாட்டிலேயே கொரோனா பாதித்தோரை அதிகம் கொண்ட 2ஆவது மாநிலமாக கேரளா திகழ்கிறது.

ஸ்பெயினில் இருந்து கடந்த 1ம் தேதி திரும்பிய திருவனந்தபுரம் மருத்துவருக்கு கொரோனா ஏற்கெனவே உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அந்த மருத்துவருடன் திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருணால் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology) பணிபுரிந்த 43 மருத்துவர்கள், 8 செவிலியர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டோரையும் சேர்த்து, மொத்த எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இந்தியர்கள் 103 பேர் என்றும், வெளிநாட்டினர் 22 பேர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் டெல்லியில் 2 பேரும், கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 3 பேரும், தெலுங்கானாவில் ஒருவரும், உத்தரப் பிரதேசத்தில் 4 பேரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சக இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பலி:

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 64 வயது நபர் ஒருவர் பலியானதையடுத்து, நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கர்நாடக மாநிலம் கலபுர்கியை சேர்ந்த முதியவர் ஒருவரும், டெல்லியில் மூதாட்டி ஒருவரும் ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 64 வயது நபர் தற்போது பலியாகியுள்ளார். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் பலியான நபர் குறித்த முழு விவரம் தெரிய வில்லை. அவர் வெளிநாட்டுக்கு பயணம் சென்று வந்தவரா, அவருக்கு எப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

மும்பையில் இரண்டு 5 நட்சத்திர ஹோட்டல்களில், கட்டணத்துடன் கூடிய கொரோனா தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் அதிகம் பரவியுள்ள மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 621 பேர் சுயவிருப்பத்தின் பேரில் தங்களை தாங்களே தனிமைபடுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனைகள், சிறிய ரக குடியிருப்புளில் அதிகளவில் தனிமைப்படுத்தும் முகாம்களை ஏற்படுத்துவதில் சிரமம் இருப்பதால், இரண்டு 5 நட்சத்திர விடுதிகளுடன் ஒப்பந்தம் செய்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் தனித்த முகாம்களை ஏற்படுத்தியுள்ளது. மும்பை விமான நிலையம் அருகில் அமைந்துள்ள ஐடிசி மராத்தா, ஹோட்டல் மிரேஜ் ஆகிய இரு ஹோட்டல்களிலும், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவோர், அந்த ஹோட்டல்களில் கட்டணம் செலுத்தி தங்கிக் கொள்ளலாம். இதற்காக வழக்கமான கட்டணத்தை விட குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஹோட்டல் நிர்வாகத்திடமும் பேசி, இம்முறையை விரிவுபடுத்த மும்பை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய யூனியன், துருக்கி, பிரிட்டன் நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியா வருவதற்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அந்நாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்கும் பொருந்தும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுமட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத் நாடுகளில் இருந்து இந்தியா வருவோரும், பிற நாடுகளில் இருந்து அந்நாடுகள் வழியாக இந்தியா வருவோரும் குறைந்தபட்சம் 14 நாள்கள் தனிமைபடுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்த சந்தேகங்களை தெளிவுப்படுத்த 24 மணி நேரமும் செயல்படக் கூடிய 1075 என்ற புதிய டோல்ப்ரீ ஹெல்ப் லைன் எண்ணும் மத்திய சுகாதார அமைச்சகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இயங்கி வரும் 011-239 78046 என்ற எண்ணும் தொடர்ந்து செயல்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன்  தாமாகவே முன்வந்து 14 நாள் நோய் தடுப்புக் காவலில் இருக்க முன்வந்துள்ளனர். திருவனந்தபுரம் அரசு ஸ்ரீசித்திரைத் திருநாள் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் வளைகுடா நாடு ஒன்றுக்கு சென்று திரும்பிய பின்னர் தொற்று அறிகுறிகளுடன் அதே மருத்துவமனையில் 3 நாள்கள் பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த மருத்துவமனையில் நடந்த கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் முரளிதரனும் பங்கேற்றார்.  அதில் குறிப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த வேறு சில மருத்துவர்களும் பங்கேற்றனர். இதை அடுத்து டெல்லி திரும்பிய அமைச்சர் முரளிதரன் தமது அரசு இல்லத்தில் நோய் தடுப்புக் காவலில் இருக்கிறார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருப்போரின் கைகளில் அழியாத மை கொண்டு முத்திரையிடுவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் 31ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளதுடன், கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும்படி வலியுறுத்தியிருப்பதுடன், விழாக்கள், பிரார்த்தனைகள் உள்ளிட்டவற்றை ஒத்திவைக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அடுத்த 15 முதல் 20 நாள்கள் மாநிலத்துக்கு மிகவும் முக்கியமானவை என்றும், இந்நாட்களில் அனைத்து வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஹரியானாவில் ஏற்கெனவே 14 வெளிநாட்டினருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருந்த நிலையில், இன்று அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையும் சேர்த்தால் அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து டெல்லியில் உள்ள உலகப்புகழ் பெற்ற குதுப் மினார் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வரும் 31 ஆம் தேதி வரை குதுப் மினார் மூடப்பட்டு இருக்கும் என அதை நிர்வகிக்கும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், ஆப்கானிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கு   இன்று முதல் (starting Tuesday) இந்தியா தடை விதித்துள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ (DGCA) வெளியிட்டுள்ள உத்தரவில்,  இந்த தடை தற்காலிகமானதுதான், அது 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 

இந்தியாவுக்கும், ஆப்கான்ஸ்தான்-மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள், இந்திய அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும், அதை மீறி பயணிகளை அழைத்து வருவது விதிமீறலாக கருதப்படும் எனவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments