கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தயாரித்த கிருமி நாசினி

0 3488

கொரோனா வைரசால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவிட்ட நிலையில், இந்த வைரசைக் கட்டுப்படுத்தும் கிருமிநாசினியை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளனர்.

 முறையான கிருமி நாசினியைப் பயன்படுத்துவதால் கொரோனாவைத் தடுக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கிருமி நாசினிகளை வாங்கியதால் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் வெளிநோயாளிகள் ஆகியோர் கிருமி நாசினியைப் பயன்படுத்தும் வகையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி தலைமையில் மருந்தியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் மூலம் கிருமி நாசினி தயாரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி ஐசோ ப்ரோப்பேன் ஆல்கஹால் ((99 புள்ளி 8 விழுக்காடு)), கிளிசரால் 98 விழுக்காடு மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ((3 விழுக்காடு என்ற அளவில்)) வேதிப் பொருட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பொருட்கள் 200 மில்லி லிட்டர் கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரில் கலக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி முழுமையாகத் தயாரானது,

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி இந்த கிருமி நாசினி உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். இதுபோன்ற வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கிருமி நாசினிக்கு மொத்தமே 100 ரூபாய்தான் செலவானதாகக் குறிப்பிடும் அவர், பற்றாக்குறை காரணமாக வெளிச்சந்தையில் இதே கிருமி நாசினி 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் கூறினார்.

கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க உதவும் கிருமி நாசினி கலன்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments