கொரோனாவும் விஜய் சேதுபதியும்..! முத்தத்தில் விழிப்புணர்வு அவசியம்

0 11417

கொரோனா அச்சம் காரணமாக உலக தலைவர்களே கைகுலுக்கும் நடைமுறையை கைவிட்டுள்ள நிலையில் ரசிகர்களையும், நாயகர்களையும் பார்த்ததும் பாசத்தால் கட்டிப்பிடித்து முத்தமிடும் பாசக்கார மனிதரான விஜய் சேதுபதியிடம் அதனை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தலைவர்கள் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த ஒருவருக்கொருவர் கைகுலுக்கும் நடைமுறையை கைவிட்டு தமிழ் பாரம்பரிய முறைப்படி கையெடுத்து கும்பிட்டு வணங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் நடிகர்களில் மனிதநேயம் கொண்டவராக புகழப்படும் விஜய் சேதுபதி தன்னுடைய முத்தபழக்கத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தன்னை சந்திக்கும் ரசிகர்களையும், நாயகர்களையும் எந்த ஒரு பேதமுமின்றி அன்பை வெளிக்காட்ட அவர்களை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுவது விஜய் சேதுபதியின் வழக்கம்..!

அந்தவகையில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்க்கு முத்தமிட்டு அவர் பதிவிட்ட டுவிட்டர் போட்டோ "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்" என டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், கொரோனா அச்சம் காரணமாகவே ரசிகர்களை அழைக்க இயலவில்லை என்று கூறியதோடு, மக்கள் அதிகமாக கூடினால் கொரோனா பரவும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஆனால் அதே விழாவில் விஜய்யை கட்டிப்பிடித்து விஜய்சேதுபதி முத்தம் கொடுக்க, பதிலுக்கு விஜய்யும் முத்தமிட்டு அன்பை வெளிக்காட்டிய போது அங்கு கொரோனா விழிப்புணர்வு மிஸ்சானது..!

கொரோனா பரவும் என கருதி கைகுலுக்குவதையே தவிர்த்து வணக்கம் செலுத்தி வரும் நிலையில் பாசத்தை வெளிப்படுத்துவதாக நினைத்து முத்தமிடுவதால், அதிவேகத்தில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .

அதிலும் முத்தமிடுவதை வழக்கமாக செய்துவரும் மாதா அமிர்தானந்தமயி, விஜய் சேதுபதி போன்ற பாசக்கார மனிதர்கள், சில நாட்களுக்கு, முத்தமழை பொழிவதை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனாவுக்கு விஜய்யோ, விஜய் சேதுபதியோ, மாதா அமிர்தானந்த மயியோ தெரியாது... கொரோனா வந்தால் சிக்கல் தானே ? என்று சுட்டிக்காட்டும் மருத்துவர்கள் வரும் முன்காப்பதே அனைவருக்கும் நலம் என்றும் இந்த விழிப்புணர்வை பிரபலங்கள் தான் முன்னின்று மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்கின்றனர்.

அதே நேரத்தில் நோயை விரட்ட அன்பை விட சிறந்த ஆயுதம் என்ன இருக்கின்றது? என்று கேள்வி எழுப்பி, கைகுலுக்கவும் கட்டியணைக்கவும் எப்போதும் தயாராக உள்ள சில டோண்ட் கேர் ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments