மருமகனோடு தவறான தொடர்பு - பெற்ற மகனையே கொன்ற தாய்

0 24104

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தனது தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்த 13 வயது மகனை கொலை செய்துவிட்டு, தவறான தொடர்பில் இருந்த அந்த நபரையே மருமகனாக்கிக் கொண்ட குரூர மனம் கொண்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

களியக்காவிளை மலையடி பகுதியைச் சேர்ந்த வசந்தாவின் கணவர் கருத்து வேறுபாடு கொண்டு சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். தனது 20 வயது மகள் மற்றும் 13 வயது மகன் லால் கிருஷ்ணனோடு தனியாக வசித்து வந்த வசந்தா, மகளின் வயதை விட 15 வயது மூத்த சுபனன் என்பவனை கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில்  கடந்த 2017ஆம் ஆண்டில் ஒருநாள் பள்ளி சென்றுவிட்டு திரும்பிய லால் கிருஷ்ணன், தவறுதலாக தூக்க மாத்திரைகளை உண்டு மயங்கிவிட்டதாக வசந்தா கூச்சல் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் லால் கிருஷ்ணன் வழியிலேயே உயிரிழந்திருக்கிறான்.

பிரேதப் பரிசோதனையில் சிறுவனின் வயிற்றில் தூக்க மாத்திரைகள் கண்டறியப்பட்டதாலும் அழுது புரண்ட வசந்தாவின் அசாத்திய நடிப்பாலும் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. மருத்துவமனையிலிருந்து எடுத்துவரப்பட்ட லால் கிருஷ்ணனின் உடல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால் வசந்தாவின் கணவர் மோகனன் தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். விசாரணையில் இறங்கிய போலீசார், வசந்தாவின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். தொடர் கண்காணிப்பில் வசந்தாவின் மருமகன் சுபனனுக்கும் வசந்தாவுக்குமே தவறான தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் தனித்தனியாக அழைத்து தங்கள் பாணியில் போலீசார் விசாரிக்கவே, உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுபனனுக்கும் வசந்தாவுக்கும் பல ஆண்டுகளாகவே தவறான தொடர்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று பள்ளி விட்டு வந்த சிறுவன் லால் கிருஷ்ணன், தனது தாயையும் சுபனனையும் ஒன்றாகப் பார்த்துவிட்டு, சத்தம் போட்டுள்ளான். தனது தந்தையிடம் சொல்லப்போவதாக மிரட்டவே, அவனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

சுபனன் லால் கிருஷ்ணனை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, அவனது வாயில் ஏராளமான தூக்க மாத்திரைகளை கொட்டியிருக்கிறார் வசந்தா என்கின்றனர் போலீசார். சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், நீண்ட நேரம் காத்திருந்து கூச்சலிட்டு நாடகாமாடியிருக்கிறார் கொடூர தாயான வசந்தா. லால் கிருஷ்ணன் இறந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்து சென்ற சுபனனை நிரந்தரமாக தன்னோடு வைத்துக்கொள்ள மகளுக்குத் திருமணம் செய்துவைத்திருக்கிறார். 

மகனை எரித்தபோதே, எரிந்துவிட்டதாக எண்ணிய உண்மைகள் கனன்று கொண்டே இருந்து வசந்தாவை காட்டிக் கொடுத்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments