இத்தாலியில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஏன்?

0 9321

கொரோனா வைரசால் சீனாவிற்கு அடுத்து இத்தாலியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய நாடுகளைக் கடந்து, ஐரோப்பாவில் உள்ள இத்தாலியில், இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஏன்? என்பதற்கு முன்வைக்கப்படும் காரணங்களைப் பார்ப்போம்...

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி சுமார் 6 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்நாட்டில் இதுவரை கொரோனாவால் 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 25 ஆயிரம் பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டின் மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் 65 வயதிற்கும் மேற்பட்டவர்களாக உள்ள நிலையில், உயிரிழப்பு பட்டியலில் பெரும்பாலானோர் முதியவர்களாகவே உள்ளனர்.

ஆரம்பத்தில், லோம்பார்டியா, எமிலியா ரோமக்னா மற்றும் வெனெட்டோ என அந்நாட்டின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே நோய்த்தொற்று காணப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் நோய்தொற்று வேகமாக பரவியதால், அவசரநிலையைப் பிறப்பித்த முதல் ஐரோப்பிய நாடு என்ற மோசமான நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டது.

இந்த அளவு பாதிப்புக்கு முக்கிய காரணம், சீனாவுடன் அதிகப்படியான விமானப் போக்குவரத்தை கொண்ட நாடாக இத்தாலி இருந்து வருகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக இருநாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து 3 மடங்காக அதிகரித்தது. இதனால் சீனாவில் இருந்து ஏரளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிய தொடங்கினர்.

ஆரம்பத்தில் நோய்த் தொற்று காணப்பட்ட வடக்குப் பகுதியில் மட்டுமே அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு, மற்ற பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

தொழிற்சாலைகள் தடையின்றி இயங்கியதால் பொதுமக்களிடையே நெருக்கம் அதிகரித்ததோடு, தொழிற்சாலைகளில் விரல் ரேகைப் பதிவுகள் போன்ற நடைமுறைகளும் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்ததால் நோய்த் தொற்று வேகமெடுத்துள்ளது.

இத்தாலியில் 21 சதவீத மக்கள் புகைப்பழக்கம் கொண்டிருப்பதால், சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் கொரோனாவால் எளிதில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், ஐரோப்பாவில் உள்ள அதிக காற்று மாசடைந்த நூறு நகரங்களில், 24 இடங்கள் இத்தாலியில் அமைந்துள்ளதும் அதிகப்படியான உயிரிழப்பிற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மேலும், வைரசின் பாதிப்பு இந்த அளவிற்கு தீவிரமாகும் என அந்நாட்டு அரசு கணிக்காமலும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் இருந்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் தான் இத்தாலி தற்போது ஏராளமான உயிரிழப்புகளை சந்தித்திருப்பதுடன், வெளி உலகுடனான தொடர்புகளை தடை செய்து கொண்டு தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments