"தமிழ்நாட்டில் 7 பேர் கொரானா அறிகுறியால் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்"-சுகாதாரத்துறை

0 7185

தமிழகத்தில் கொரானா அறிகுறிகளுடன் 7 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மேலும் 2 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற சர்வதேச விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையின் அடிப்படையில், ஆயிரத்து 601 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 7 பேர் மருத்துவ கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நாகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும், சிங்கப்பூரில் இருந்து திரும்பிய தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவரும் கொரானா சந்தேகத்தின் பேரில், திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் கொரானா அறிகுறிகள் ஏதும் இல்லாத போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் ஷார்ஜாவிலிருந்து கேரளா வந்த விமானத்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த இருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 41 பேரையும் கண்காணிக்குமாறு திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையை அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளை சேர்ந்த அந்த 41 பேரின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மதுசூதனன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு, பட்டியலில் இருப்பவர்களை பரிசோதித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரானா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் இருவர்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6-ஆம் தேதி தாய்லாந்திலிருந்து கோவை வந்த ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே போன்று அன்றைய தினம் கத்தாரிலிருந்து உடல் நல பாதிப்புகளுடன் வந்த பெண்ணும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தொடர்ந்து உடல் நல பாதிப்புகள் குறையாததையடுத்து இருவரும் கொரானா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சென்னை கிங் இன்ஸ்டியூட்டுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. 

இதனிடையே திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். கொரானா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளும் முன்வந்துள்ள நிலையில், அங்குள்ள தனித்த வார்டுகள் அரசு குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் படி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments