ஸ்பெயின் மீதான கோரப்பிடியை இறுக்கிவரும் கொரானா..

0 3220

கொரானா வைரஸ் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரிப்பதை அடுத்து, அமெரிக்கா நாடு தழுவிய நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. இத்தாலியை தொடர்ந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 120 பேர் பலி என, ஐரோப்பாவில் ஸ்பெயின் மீதான கொரானாவின் கோரப்பிடி இறுகிவருகிறது. 

உலகம் முழுவதும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 995 பேருக்கு கொரானா வைரஸ் தொற்றியுள்ளது. இதுவரை 5 ஆயிரத்து 436 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் West Virginia தவிர மற்ற 49 மாநிலங்களிலும் கொரானா வைரஸ் தலைகாட்டியுள்ளது. அங்கு 2 ஆயிரத்து 204 பேருக்கு கொரானா தொற்றியுள்ளதோடு, இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், கொரானா வைரஸ் பரவல் தொடர்பாக நாடு தழுவிய நெருக்கடி நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், கொரானா சவாலை எதிர்கொள்ள அமெரிக்க மாநிலங்களுக்கு 50 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3.7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியாதாரம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரானா தொற்று இருக்கிறதா என சோதனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா, தேவை எனில் எங்கெங்கு பரிசோதனை செய்யலாம் என ஆன்லைனிலேயே தெரிந்துகொள்வதற்கான வசதி கூகுளுடன் இணைந்து வழங்கப்பட உள்ளது.

கொரானாவை எதிர்கொள்ள நாடு தழுவிய நெருக்கடி நிலையை அமெரிக்க அதிபர் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தை நிலவரம் மேம்பட்டது. இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த டிரம்ப், தானும் கொரானா பரிசோதனை செய்துகொள்ள வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இதனிடையே, அமெரிக்க விசா பெறுவது தொடர்பான நடைமுறைகளை மார்ச் 16ஆம் தேதி முதல் நிறுத்திவைப்பதாக, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கல்வி நிலைய வளாகங்களில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால், மாற்று வசதிகளுக்கு சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் மனுச்செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, பல்கலைக்கழகங்களின் சுகாதார சேவைகள், சர்வதேச மாணவர்களுக்கான சேவைகள், மாணவர் சுகாதார காப்பீட்டு வசதிகளை பெறுவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவலின் மையமாக சீனாவின் வூகான் இருந்த நிலை மாறி, அந்த இடத்தை ஐரோப்பா பிடித்துள்ளது. சீனா தவிர்த்து, உலகளவில் மொத்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை ஐரோப்பாவில் அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி நீடிக்கிறது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில், கொரானாவுக்கு 250 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் மொத்தம் 17 ஆயிரம் பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது.

கொரானா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை தாக்குப் பிடிக்க முடியாமல் இத்தாலி அரசு திண்டாடி வரும் நிலையில், அறிகுறி உள்ளவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை எனில், அபாரதத்துடன் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, கொரானா தொற்று உள்ளவர்கள் அலட்சியமாக செயல்பட்டு, பலவீனமானவர்களுக்கு வைரஸ் பரவ காரணமாக அமைந்தால், உள்நோக்கத்துடன் கூடிய கொலை என குற்றம்சாட்டப்பட்டு, 21 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments