கொரானா பாதிப்பு விவரம்.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

0 3706

இந்தியாவில், கொரானாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. 4000 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால், (Lav Agarwal), உள்துறை அமைச்சகத்தின் அனில் மாலிக், சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சபீனா அலி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, நாட்டில், கொரானாவால் பாதிக்கப்பட்டோர், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவர்கள், உயிரிழப்பு குறித்த தகவல்களையும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களையும் வெளியிட்டனர்.

அதன்படி, இந்தியாவில் கொரானா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 81ஆக அதிகரித்துள்ளது. கொரானாவிற்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக, கேரளாவில் 19 பேரும், மகாராஷ்டிராவில் 14 பேரும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில், 17 பேர் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 17 பேரில், இத்தாலியைச் சேர்ந்தவர்கள் 16 பேரும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

கொரானா பாதிப்பு பரவத் தொடங்கிய நிலையில், இந்தியா வந்த 42,296 விமான பயணிகள், சுகாதாரத்துறை பணியாளர்களால் கண்காணிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், கொரானா அறிகுறி கண்டறியப்பட்ட 2,559 பேரில், 522 பேர் மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை செல்ல உள்ளதாக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments