கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

0 6622

கொரானா வைரஸின் தாக்கத்தை தங்கள் நாட்டில் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக சீனா அறிவித்துள்ள நிலையில், இதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஹூபே மாகாணம் உகானில் இருந்து கொரானா வைரஸ், பிற பகுதிகளுக்கு பரவியதை கண்டுபிடித்த சீனா உடனடியாக சுதாரித்து கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

முதல்கட்டமாக உகான் மற்றும் ஹூபே மாகாணத்துக்கு சீல் வைத்த சீன அரசு, அங்கு பிற பகுதி மக்கள் வருவதற்கும், அங்கிருந்து பிற பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கும் அதிரடியாக தடை விதித்தது. இதே நடவடிக்கையை பிற பகுதிகளுக்கும் சீன அரசு விரிவுபடுத்தியதால் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி முதல் சுமார் 93 கோடி மக்கள், தங்கள் வசிக்கும் பகுதியிலேயே முடங்கினர்.

இதைத் தொடர்ந்து, சீன மக்கள் அனைவரின் உடல்வெப்ப அளவும் கட்டாய பதிவுக்கு உட்படுத்தப்பட்டது. வசிப்பிடங்கள் மற்றும் அலுவலகங்களிலேயே அவர்களின் முந்தைய பயணம் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.

வீட்டொன்றுக்கு தலா ஒருவர் மட்டுமே வெளியே சென்று வர அனுமதியளிக்கப்பட்டது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

கார் ஓட்டுநர்கள் மூலம் சீன மக்களுக்கான உணவுகள், அவர்களின் வீடு தேடி சென்று விநியோகிக்கப்பட்டது. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளையும் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரெஸ்டாரென்ட்டுகளில் உணவு அருந்த வருவோரை சுற்றிலும் சிறிய தடுப்பு போன்றவை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் அவர்கள் இருமினாலோ, தும்மினாலோ எச்சில் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

சமூக ரீதியிலான இந்நடவடிக்கை மட்டுமன்றி, தொழில்நுட்பத்தையும் தனது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு சீனா பயன்படுத்தியுள்ளது. மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் சீன அரசுக்கு செல்பேசி நிறுவனங்கள் உதவி செய்தன.

காய்ச்சல் இருப்போர், முகமூடி அணியாதோரை கண்டுபிடிக்க பல்வேறு நிறுவனங்களும், பேசியல் ரிககனேசன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.

தடுப்பு நடவடிக்கை, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீறுவோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சீன அரசு வழிவகை செய்தது.

இதேபோல், சமூகவலைதள பயன்பாட்டாளர்களிடம் இருந்து வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் குறித்த தகவலும், அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் குறித்த தகவலும் பெறப்பட்டன. சில நகரங்களில் இதுகுறித்த தகவல்களை அளிப்போருக்கு வெகுமதியும் அறிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு பயணம், வெளிநாடுகளில் தங்கியிருந்த இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் அடையாள கோடுகள் அளிக்கப்பட்டு, கொரானா பாதிப்பு குறித்த சோதனை நடத்தப்பட்டது.

இத்தகைய தீவிர நடவடிக்கையால்தான் சீனாவால் கொரானாவை கட்டுக்குள் கொண்டு வர முடிந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள யேல் பல்கலைக்கழக சமூகம் மற்றும் இயற்கை அறிவியல் பேராசிரியர் நிகோலஸ் கிஸ்ட்ராகிஸ், சீனாவின் நடவடிக்கையை சமூக அணு ஆயுதம் என கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments