கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்வு... இந்தியாவில் முதல் உயிரிழப்பு உறுதி

0 5861

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவாமல் இருப்பதற்காக டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

டெல்லியில் இம்மாத இறுதி வரை பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. . உயர் அதிகாரிகளுடன் முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே கணினி மூலம் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று ஜம்முவிலும் கொரோனா பரவுவதைத் தடுக்க அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களும் மூடப்பட்டுள்ளன. சட்டிஸ்கர் மாநில அரசும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.உத்தரகாண்ட் அரசும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இம்மாத இறுதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் குவைத்துக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது. மேலும் பிரான்ஸ் , இலங்கை, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகளை கணிசமாக குறைக்கப் போவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஏற்கனவே ரோம், மிலன், சியோல் நகரங்களுக்கான விமானங்களையும் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.

இதனிடையே, கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்,  இந்தியாவில் முதல் கொரானா மரணம் நிகழ்ந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த நிலையில், கொரானா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்தை தெலங்கானா மாநில அரசும், கர்நாடக மாநில அரசும் உறுதி செய்து அறிவித்திருக்கின்றன. 

கேரளாவில், மேலும் 2 பேர்  கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இவர்கள் இருவரும் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் , கேரளாவில் கொரானாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து விட்டதாகவும் பினராயி விஜயன் கூறினார். இதனிடையே, திருப்பதியில், ஒருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

பெங்களூரில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்குக் கொரானா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்குத் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் ஒன்று முதல் 6  வரையிலான வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு வடக்கு,  தெற்கு, பெங்களூரு நகரம்,  புறநகரம் கல்வி மாவட்டங்களில் 1 முதல் 6 வரையிலான வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் 7 முதல் 9ம் வகுப்பு  வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தேர்வு நாளில் மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

கொரானா அச்சுறுத்தல் எதிரொலியாக டெல்லியில் ஐபிஎல் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் மாநாடு, கருத்தரங்கம் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, தொற்றுநோய்கள் சட்டப்படி, கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஐபிஎல் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் தடை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

இருநூற்றுக்கு மேற்பட்டோர் கூடும் மாநாடுகளும் கருத்தரங்கங்களும் தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த உத்தரவைப் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments