IPL போட்டிகளில் விளையாட வெளிநாட்டு வீரர்கள் வருவதில் சிக்கல்

0 1562

இந்தியாவில் மேலும் 10 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, நாட்டில் கொரானா பாதித்தோரின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது. கொரானா காரணமாக விசா ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், ஐபிஎல் போட்டிகளில் விளையாட வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளிநாடு சென்று வந்தோர், அவருடன் தொடர்பு கொண்டோரால் கொரானா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஒருவர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த இத்தாலி நாட்டினருக்கு வழிகாட்டியாக செயல்பட்ட நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவ கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 3 பேரும் தனிமையில் கண்காணிக்கப்படுவதுடன் ரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கேரளாவில் மேலும் 8 பேருக்கும், ராஜஸ்தானில் ஒருவருக்கும் கொரானா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கேரளாவில் புதிதாக கொரானா பாதித்தோரையும் சேர்த்து அந்த மாநிலத்தில் கொரானா பாதித்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. 

கொரானா பாதித்தோரின் எண்ணிக்கை விவரத்தை இந்தியர்கள், வெளிநாட்டினர் என தனித்தனியாக பிரித்து மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியர்களை பொறுத்தவரையில் டெல்லியில் 6, கேரளாவில் 17, தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தலா ஒருவர், உத்தரப் பிரதேசத்தில் 10, லடாக்கில் 3, கர்நாடகாவில் 4, மகாராஷ்டிரத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டினரை பொறுத்தவரையில், ஹரியானாவில் 14 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும், உத்தரப் பிரதேசத்தில் ஒருவரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கொரானா பரவுவதை தடுக்க பல்வேறு விசாக்களை மத்திய அரசு ஏப்ரல் 15ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியாவில் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் 60 பேர் கலந்து கொள்வதில் சிக்கல் நேரிட்டுள்ளது. இதனால் போட்டியை ஒத்திவைப்பது குறித்து மும்பையில் வரும் 14ம் தேதி வரை ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.

இதனிடையே, கொரானா வைரஸ் பரவுவதை சுட்டிக்காட்டி, 1897ம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு சட்ட 2ஆவது பிரிவை அமல்படுத்தும்படி மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் கேட்டுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளால் தொடர்ந்து வெளியிடப்படும் அறிவுறுத்தல்களை செயல்படுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது.

இந்நிலையில், கொரானா பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல் தொடர்ந்து வெளியிடப்படுவதால், மக்கள் பீதி அடைவதாகவும், ஆதலால் அதை ரகசியமாக வைத்து பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்று இந்திய மருத்துவ சங்கம் ((indian medical association)) கோரிக்கை விடுத்துள்ளது. 

கொரானா வைரசுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும் என மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய நலவாழ்வுத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஈரானில் உள்ள இந்தியர்களைத் திருப்பி அழைத்து வருவதற்காக அடுத்த 3 நாட்களில் 3 விமானங்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments