கொரோனா வைரஸ் தொடர்பாக சட்டப்பேரவையில் ருசிகரமான விவாதம் -சிரிப்பலை

0 2041

தமிழகத்தில் கொரானா தொடர்பாக எந்த அச்சமும் இல்லை என்பதோடு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் கொரானா மீதான கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய உறுப்பினர்கள், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க வேண்டும், மாஸ்க் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், ரேசன் கடைகளில் கூட மாஸ்க் கொடுக்கலாம், பேருந்து போக்குவரத்தில் நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சுகாதாரத்துறை அமைச்சர் வேகமாக செயல்படுகிறார், எனவே அவர் சீனாவுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி குறிப்பிட்ட போது, வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்பது தனக்கும் பொருந்தும் என விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

வதந்தியை அரசு தான் பரப்புகிறது என்றும், போனை எடுத்தால் கொரானா, சட்டமன்றத்தில் கொரானா விவாதம் என எங்கு பார்த்தாலும் கொரானா பயம் உள்ள நிலையில், அரசோ ஒன்றும் இல்லை சொல்லிக் கொண்டு இருப்பதாக துரைமுருகன் கூறியபோது சிரிப்பலை எழுந்தது.

தாங்கள் எல்லாம் புள்ள குட்டிகாரர்கள், உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால் இடை தேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம், காப்பாத்துங்க சார் என துரைமுருகன் குறிப்பிட்டபோது சிரிப்பலை தொடர்ந்தது.

ஏசியில் இருப்பவர்களுக்கு கொரானா பாதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், சட்டமன்றத்தில் அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய துரைமுருகன், பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், இங்கு உள்ளவர்களுக்கு மாஸ் வழங்கி காப்பாற்றுங்கள் என்றார்.

70 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் எதிர்கட்சி துணை தலைவர் அச்சம் கொள்கிறார் என்று பதிலளித்த முதலமைச்சர், அச்சப்பட வேண்டாம் என்றும், சிகிச்சை அளிக்க தரமான மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்றும் கூறினார்.. தமிழகத்தில் கொரோனா தொடர்பாக எந்த அச்சமும் இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

சட்டசபைக்குள் கொரானா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய சபாநாயகர், மாஸ்க் பயன்படுத்த தேவை ஏற்படும் போது வழங்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments