கொரானா வைரஸை தடுக்க முடியாமல் திணறி வரும் ஐரோப்பா

0 786

கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் ஐரோப்பா திணறி வருகிறது. ஐரோப்பாவில் இதுவரை 951 பேர் கொரானாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 827 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 196 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர அனைத்து விற்பனையகங்களும் மூடப்பட்டுள்ளன.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதைவிட, உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டில் அனைத்து மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன.

போலந்து மற்றும் உக்ரைனில் அனைத்து பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள், இசை மற்றும் நாடக அரங்குகள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன. பெல்ஜியம், பல்கேரியா, அல்பேனியா மற்றும் ஸ்வீடன் நாடுகளில் கொரானாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் கொரானா பாதித்தவர்கள் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 83 பேருக்கு புதிதாக கொரானா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதோடு, 4 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது.

இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பள்ளிகள் மூடல், கால்பந்து போட்டிகள் ரத்து, கூட்டம் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து, அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றுவது உள்ளிட்ட உத்தரவுகளை அந்நாடு பிறப்பிக்க உள்ளது. இதற்காக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜெர்மனியில் ஆயிரத்து 567 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் கொரானா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் மத்தியில் போதிய எதிர்ப்பு சக்தி இல்லாத நிலையில், தடுப்பு மருந்தோ மருத்துவமோ இல்லாதபோது 60 முதல் 70 சதவீதம் பேர் வரை பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறது என அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments