அரசியல் பிரவேசம் - ரஜினியின் 3 திட்டம்..!

0 5096

க்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி தெரிந்தபிறகு அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், அரசியல் மாற்றம் தொடர்பாக தம்மிடம் 3 முக்கிய திட்டங்கள் இருப்பதாக கூறிய ரஜினி, அதில் முதலாவது திட்டம், அத்தியாவசியமான பதவிகளை வைத்துக் கொண்டு தேவையற்ற கட்சி பதவிகளை நீக்குவது என்றார்.

எம்.பி, எம்எல்ஏ பதவிகளுக்கு இளைஞர்களை கொண்டு வந்து ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்க தாம் பாலமாக இருக்க வேண்டும் என்பது 2ஆவது திட்டம் என்றும், கட்சி தலைமையையும், ஆட்சி தலைமையையும் தனித்தனியாக பிரிப்பது 3ஆவது திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை தமக்கு என்றைக்கும் இருந்ததில்லை என்றும், முதல்வராக தம்மை கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என்றும் கூறிய அவர், தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கும் எண்ணம் இல்லை என்றார்.

தாம் வலிமையான கட்சி தலைமையாக இருக்க போவதாகவும், தமது கட்சியிலிருந்து தேர்வு செய்யப்படும் நேர்மையும், திறமையும் ஒருங்கே அமைய பெற்ற தன்னம்பிக்கை கொண்ட இளைஞரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பது தான் இலக்கு என்றும் தெரிவித்தார்.

மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தபிறகு அரசியலுக்கு வருவேன் என கூறிய ரஜினி, அந்த எழுச்சியை மக்களிடம் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு, மாநாடு தொடர்பான அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடவில்லை. இதேபோல் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ரஜினி, அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் புறப்பட்டு சென்றார்.

சிஷ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது என்றும், சிலர் கட்சிப் பதவிகளை தொழிலாக கருதி செயல்படுகிறார்கள், அவர்களுக்கு வேறு வேலையே இல்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தேர்தலில் ஆளுமைமிக்க தலைவரின் வாரிசு என்று நிரூபிக்க முயல்பவரையும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் முழு கஜானாவுடன் இருப்பவர்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறிய ரஜினிகாந்த், அசுர பலத்துடன் இருக்கும் 2 மிகப்பெரிய ஜாம்பவான்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.

 தமக்கு இப்போதே 71 வயதாகிவிட்டது என்று கூறிய ரஜினி, அப்படியிருக்கையில் அடுத்த முறை மீண்டும் ஆட்சிக்கு வருகிறேன் என்று எப்படி தெரிவிக்க முடியும்? என கேள்வியெழுப்பினார். அதேபோல் 2 பெரும் கட்சிகளை சினிமா மூலம் கிடைத்த புகழ் மற்றும் ரசிகர்களை மட்டும் வைத்து எப்படி சமாளிக்க முடியும் என்றும் ரஜினி கேள்வியெழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments