கடமையைச் செய்த காவலர் - ஆபாசமாக வசைபாடிய வழக்கறிஞர்

0 1411

பெரம்பலூரில் இரவில் சிறுமி ஒருவருடன் குடிபோதையில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் வழக்கறிஞர், தன்னை விசாரித்த தலைமைக் காவலரை மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. 

பெரம்பலூர் ஆயுதப் படையில் தலைமைக் காவலராக பணிபுரியும் முத்துக்குமார் கடந்த 8ஆம் தேதி இரவு ஊர்க்காவல் படையினருடன் 3 ரோடு பாலக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது  இளைஞர் ஒருவர் 15 வயது சிறுமி ஒருவரை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட தலைமைக் காவலர் முத்துக்குமார், அந்த இளைஞரை நிறுத்தி விசாரித்துள்ளார். குடிபோதையில் இருந்த அந்த இளைஞர், தன் பெயர் தினேஷ்குமார் என்றும் தாம் ஒரு வழக்கறிஞர் என்றும் கூறியிருக்கிறார். அவரது பேச்சின் தோரணையில் சந்தேகம் கொண்ட காவலர், சிறுமியை விசாரித்து, அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு தினேஷ்குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், தனது நண்பர்கள் சிலருக்கு போன் செய்து அங்கு வரவழைத்திருக்கிறார். “நான் ஒரு வக்கீல் என்னை எப்படி நீ காவல் நிலையத்துக்கு அழைக்கலாம் ?” என்று காவலர் முத்துக்குமாரிடம் எகிறிய தினேஷ்குமார், ஒரு கட்டத்தில் ஆபாசமாகப் பேசி அவரை அடிக்கப் பாய்ந்தார்.

ஒரு வக்கீலாக இருந்துகொண்டு குடித்துவிட்டு இப்படி செய்யலாமா எனக் கேட்ட காவலரிடம் “ஏன் வக்கீல் என்றால் குடிக்கக்கூடாதா” என எகிறிய தினேஷ்குமாரை ஒருவழியாக காவல் நிலையம் அழைத்துச் சென்று புகாரளித்துள்ளார் முத்துக்குமார்.

ஆனால் தினேஷ்குமார் அரசியல் பின்னணி கொண்டவர் என்று கூறப்படும் நிலையில், காவல்நிலையத்தில் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்துபோன காவலர் முத்துக்குமார் வெளியிட்டுள்ள ஆடியோவில், அந்த வழக்கறிஞர் பேசிய ஆபாச பேச்சுகளுக்கு கோபப்பட்டு தாம் அவரை அடித்திருந்தால் கண்டிப்பாக தம் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் தினேஷ் காவலர் முத்துக்குமாரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ இணையத்தில் வைலராகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments