மத்திய பிரதேச ஆட்சி கட்டிலை அசைத்த அரச பரம்பரை வாரிசு..

0 8943

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸிலிருந்து இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து, 22 MLA-க்கள் ராஜினாமா செய்ததால் உச்சகட்ட அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. அவரும் பாஜக-வில் இணைந்து விட்டதால் பல்வேறு அரசியல் திருப்பங்கள் காத்திருக்கின்றன. ஜோதிராதித்ய சிந்தியாவின் அதிரடியையும், அவருக்கு இருக்கும் ஆதரவாளர்களையும் கணிக்க காங்கிரஸ் தவறிவிட்டதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

image

தற்போது மத்திய பிரதேச அரசியலை புரட்டி போட்டுள்ள ஜோதிராதித்ய சிந்தியா, அரச பரம்பரையை சேர்ந்தவர். இவரது தாத்தா ஜிவாஜிராவ் சிந்தியா (Jivajirao Scindia), குவாலியரின் கடைசி மன்னர் ஆவார். அதே போல ஜிவாஜிராவின் மனைவியும், குவாலியர் ராஜமாதா என்றழைக்கப்பட்ட விஜயராஜே சிந்தியா அதாவது ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி ஜனசங்கத்தின் தீவிர உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சியின் இணை நிறுவனராகவும் இருந்தார். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக பல முறை தேர்வு செய்யப்பட்டார்.

image

இவரை தொடர்ந்து ஜிவாஜிராவ் - விஜயராஜே தம்பதியரின் மகனான மாதவராவ் சிந்தியா, ஜனசங்கத்தில் இணைந்து அரசியல் பயணத்தை துவக்கினாலும், பின்னர் ஏற்பட்ட பல கருத்து வேறுபாடுகள் காரணமாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியிலும் ஏற்றம் கண்ட அவர், மக்களவைக்கு தொடர்ந்து தேர்வானார். 2001-ல் விமான விபத்தில் சிக்கி இறக்கும் வரை, 9 முறை தொடர்த்து எம்பி-யாகி வெற்றி வரலாற்றை தக்க வைத்திருந்தார்.

image

தந்தை மாதவராவ் சிந்தியாவின் திடீர் மறைவிற்கு பிறகு காங்கிரசில் ஐக்கியமானார் ஜோதிராதித்ய சிந்தியா. 1971ம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் பிஏ பொருளாதாரம் மற்றும் எம்.பி.ஏ முடித்துள்ளார். தந்தையின் அகால மரணத்திற்கு பின் அரசியலில் காலடி வைத்த ஜோதிராதித்ய சிந்தியா, 2002, 2004,2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து எம்பி-யாக இருந்தார்.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களையும், பாரதியஜனதா 109 இடங்களையும் கைப்பற்றின. இரு தேசிய கட்சிகளுமே பெரும்பான்மை பெறாத நிலையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் , சுயேச்சை உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் அரியணை ஏறியது.

எனினும் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் கட்சியின் சீனியர் தலைவரான கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவிற்கும் இடையே கடும் போட்டி மற்றும் பனிப்போர் நிலவியது. அப்போது காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி, கட்சிக்கு இளரத்தம் பாய்ச்சுவதில் முனைப்பு காட்டியதால் ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வராக்க நினைத்தார். ஆனால் தனக்கிருந்த செல்வாக்கு மற்றும் கட்சியின் மூத்த தலைவர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி முதல்வர் நாற்காலியில் வெற்றிகரமாக அமர்ந்தார் கமல்நாத்.

image

இதனால் கமல்நாத் - ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு இடையே ஏற்பட்டிருந்த புகைச்சல் மேலும் அதிகரித்தது. 2019 மக்களவை தேர்தலில் குணா தொகுதியில் இருந்து போட்டியிட்ட ஜோதிராதித்ய சிந்தியா, பாஜக வேட்பாளரான கிருஷ்ணா பால் சிங் யாதவிடம் தோல்வியுற்றார். மாநிலத்திலும் அதிகார பதவியை கைப்பற்ற முடியாமலும், மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியாமலும் போனதால் விரக்தியில் இருந்தார் ஜோதிராதித்ய சிந்தியா.

அவ்வப்போது வார்த்தை போர் மூலமாகவும் இருவரும் மோதி வந்தனர். எப்படியும் மாநிலங்களவை எம்.பி பதவி அல்லது மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தலைமை தனக்கு அளிக்கும் என்று எதிர்பார்த்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர் சீனியர் தலைவர்களான கமல்நாத், திக்விஜய் சிங் ஆகிய இருவரும். இதனால் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாகவே ஆட்சிக்கு எதிராக கலக குரலை தொடர்ந்து எழுப்பி வந்த ஜோதிராதித்ய சிந்தியாவை கணிக்க தவறிவிட்டது கமல்நாத் தலைமையிலான மாநில காங்கிரஸ். வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியை விட்டு போனால் போகட்டும். மிஞ்சி போனால் அவருடன் 5 எம்எல்ஏ-க்கள் சென்றுவிடுவார்களா, என்ற மிதப்பில் இருந்தது மத்திய பிரேதேச அதிகார தரப்பு.

image

கமல்நாத் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்த போக்கு தான், ஜோதிராதித்ய சிந்தியாவின் அதிரடிகளுக்கு அச்சாரமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. என்ன செய்து விட முடியும் இவரால் என்ற மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்களின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி, தன்னுடன் 22 சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்று பெரும்பான்மையை இழக்க வைத்து கமல்நாத் தலைமையிலான ஆட்சியை அசைத்து விட்டார் ஜோதிராதித்ய சிந்தியா.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments