விரைவில் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து சோலார் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

0 1600

 விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து சோலார் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் - அமைச்சர்  தங்கமணி 

விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். திமுக எம்எல்ஏ பிச்சாண்டி பேசுகையில் கடலாடியில் சோலார் மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, கடலாடி சோலார் மின் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடையாணை பெறப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

இதனால் திட்டமிட்டபடி சோலார் திட்டத்தை துவங்காததால், கால அவகாசம் நிறைவடைந்ததாக கருதி மத்திய அரசே திட்டத்தை ரத்து செய்து இருப்பதாக தங்கமணி தெரிவித்தார். ஆனால் கர்நாடகாவைப்போல, விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து சோலார் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தமிழகத்தில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மீனவ மக்களுக்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை -  அமைச்சர்  ஜெயக்குமார்

மீனவ மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்காக 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நாகூர் பட்டினச்சேரி வெட்டாற்றின் வடகரை முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நாகை தனியார் துறைமுகத்துக்கு கப்பல்கள் வந்து செல்ல மணல் கொட்டி மணல்மேடு உருவாக்கப்படுவதால் கப்பல்கள் அதில் மோதி மீனவர்கள் உயிர் இழப்பதாகக் கூறி எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகை அருகே அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் துறைமுகம் அமைக்கும் பணி நடைபெறுவதாக கூறினார். தரங்கம்பாடி வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் காமராஜ்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகவும், துறையின் இணையளதள முகவரி மூலம் புதிய மின்னனு அட்டை பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளை வீடுகளில் இருந்தே இணையம் மூலமோ இ-சேவை மையங்கள் மூலமோ பெறலாம் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவது தொடர்வதாக துரைமுருகன் பேச்சு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனை போலவே அவரது தோட்டமும் வளமாக இருப்பதால் யானைகள் தேடி வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால், சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மீதான விவாதத்தில் பேசிய துரைமுருகன், யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவது தொடர்வதாகவும், காட்பாடியில் உள்ள தனது தோட்டத்திலேயே 3 முறை இதுபோன்று நடந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் தான் ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடியை மிதித்து சேதப்படுத்திய யானைகள், முருங்கைகாய் விற்கலாம் என நம்பி வளர்த்த முருங்கை மரத்தையும் சேதப்படுத்தியதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், துரைமுருகனை போலவே அவரது தோட்டமும் வளமாக இருப்பதை அறிந்து யானைகள் தேடி வருவதாகவும், யானைகள் விரும்பாத செடிகளை பயிரிடுங்கள் என்றும் கூறியதால் சிரிப்பலை எழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments