மூவர் கொடூரக் கொலை..! சிக்கிய வடமாநில கும்பல்

0 2527

சேலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, அவரது உறவினர் என 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கொண்ட வடமாநில கும்பல் பிடிபட்டுள்ளது.

சேலம் இரும்பாலை அருகேயுள்ள திருமலைகிரி பகுதியில் தங்கராஜ் என்பவர் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

தங்கராஜ் வீட்டுக்கு அருகிலேயே உள்ள ஒரு வீட்டில் ஆகாஷ், அவரது மனைவி வந்தனாகுமாரி, அவர்களது 6 மாத ஆண் குழந்தை, உறவினர் சன்னிகுமார் என்பவரோடு தங்கியிருந்தனர்.

சில தினங்களுக்கு முன் தங்கராஜிடம் இருந்து வேலையை விட்டுப் போன அதே ஆக்ராவைச் சேர்ந்த வினோத் என்பவன் தனது கூட்டாளிகளுடன் வந்து மீண்டும் அவரிடம் வேலை கேட்டுள்ளான். அவனையும் கூட்டாளிகளையும் தற்காலிகமாக ஆகாஷ் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரிலுள்ள வீட்டிலேயே தங்கவைத்துள்ளார் தங்கராஜ்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆகாஷுடைய குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அங்கு ஆகாஷ், வந்தனாகுமாரி, சன்னிகுமார் மூவரும் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், எதிர் வீட்டில் தங்கியிருந்த வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள் தலைமறைவானதை கண்டுபிடித்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசாருக்கு அந்த கும்பல் சேலம் ரயில் நிலையத்திலிருந்து கேரளா செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கேரள போலீசாருக்கு தமிழக போலீசார் தகவல் அளித்தனர். உஷாரான கேரள போலீசார், பாலக்காடு ரயில் நிலையத்தில் வைத்து வினோத் மற்றும் அவனது கூட்டாளிகளான அஜய், சூரஜ் ஆகியோரை கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விஜி என்பவன் தப்பியோடி தலைமறைவாகியிருக்கிறான். கொலையான மூன்று பேரும், கைதாகியுள்ள 3 பேரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்தக் கொலை பணத் தகராறில் அரங்கேறியதா, பெண் தகராறில் அரங்கேறியதாக என இதுவரை தெரியாத நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே பெற்றோரை இழந்த ஆகாஷின் 6 மாத ஆண் குழந்தை நிர்கதியாகியிருக்கிறது. ஆக்ராவிலுள்ள ஆகாஷின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்தக் குழந்தையை தங்கராஜ் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments