யெஸ் வங்கி நிறுவனரிடம்.. அமலாக்கத்துறை விசாரணை..!

0 1385

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை காவலில் எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சித்த ராணாவின் மகள் ரோஷிணி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

யெஸ் வங்கியிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய பல்வேறு நிறுவனங்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் அந்த வங்கி கடும் நெருக்கடிக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையில் எடுத்தது.

DHFL நிறுவனத்திற்கு 4 ஆயிரத்து 450 கோடி ரூபாய் கடன் வழங்கிய விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவரிடம் 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ராணா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதிருக்க ராணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 11ம் தேதி வரை விசாரணை நடத்த அமலாக்கத்துறையினருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்ததை அடுத்துஅவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ராணாவின் குடும்பத்தினர் பெயரில் சுமார் 2ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதை விசாரணையில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பணத்தை சுழற்சி செய்வதற்காக பல்வேறு போலி நிறுவனங்களை ராணாவின் குடும்பத்தினர் நடத்தி வந்ததும் அதில் விலை உயர்ந்த சில ஓவியங்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி ராணாவுக்கு 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததும் விசாரணையில் புலனாகியுள்ளது.

ராணாவுக்கு சொந்தமான சொத்துகள், லண்டனில் உள்ள முதலீடுகள் போன்றவையும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று லண்டன் தப்பிச் செல்ல முயன்ற ராணாவின் மகள் ரோஷிணி கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர். அவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சிபிஐயும் ராணா மீது முறைகேடு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments