சென்னையில் நம்பர் ஒன் சம்போவா ? காக்காவா ? ஸ்கெட்ஜ் போடும் கேடிகள்...

0 6564

சென்னையில் நம்பர் ஒன் தாதா யார் ? என்பது தொடர்பான போட்டியில் இரு ரவுடி குழுக்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பொதுமக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. பட்டக் பகலில் குண்டுகளை வீசி விளையாடும் ரவுடிகளின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

ஒரு காலத்தில் வடசென்னை, தென்சென்னை என்று பிரித்துக் கொண்டு கஞ்சா விற்பனை, மாமூல் வசூல், சூதாட்ட கிளப், ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வந்த பல தலைகள் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகளால் தரை சாய்ந்துவிட்டன. பலர் வயதாகி ஒதுங்கிக்கொண்டனர்.

அந்த காலத்தில் பிரபல ரவுடிகளுக்கு 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்ட அடியாளாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி, சி.டி.மணிகண்டன் போன்றோர் எல்லாம் இன்றைக்கு சென்னை நகரை அதிரவைக்கும் தாதாக்களாக பணம் பலத்துடன் உருவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த இரு தாதாக்களுக்கும் ஒரே நேரத்தில் மரணபயத்தை காட்டியதோடு, தற்போதைக்கு சென்னையில் நம்பர் ஒன் ரவுடி யார் ? என்ற மோதலையும், தன்னுடைய மிஸ்சிங் ஸ்கெட்ச்சால் மிஸ் ஆகாமல் தொடங்கி வைத்திருப்பவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞரான செந்தில் என்கிற சம்பா செந்தில்..! ரவுடிகளின் வழக்குகளை மட்டுமே எடுத்து நடத்தியதால் ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் என்கின்றனர் காவல்துறையினர்.

பட்டபகலில், தேனாம் பேட்டை காவல் நிலையத்திற்கு அருகில் சம்பா செந்திலின் ஆதரவாளர்களால் அடுத்தடுத்து வீசப்பட்ட குண்டுகளால் அதிர்ந்து போனது சாலையில் சென்ற வாகனங்கள் மட்டும் அல்ல சென்னை காவல்துறையின் ரவுடிகள் ஒழிப்பு சிறப்பு படையும் தான்..!

குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்ட ஒரு சில தினங்களில் சட்டத்தால் அதை உடைத்து சுதந்திர பறவையாக வெளியேவந்த காக்கா தோப்பு பாலாஜியையும், சிடி மணியையும் ஒரே நேரத்தில் தூக்க போட்ட, சம்பா செந்திலின் ஸ்கெட்ச் மிஸ் ஆனது காவல்துறையின் அதிர்ஷ்டம்..!

குண்டு வீச்சு பின்னணியை விசாரித்தபோது காவல்துறைக்கு கிடைத்த தகவல்கள் இன்னும் அதிர்ச்சிகரமானவை. ஸ்கெட்ச் போட்டு கொலை திட்டங்களை கச்சிதமாக முடிப்பதிலும், ரியல் எஸ்டேட் பிரச்சனைகளை போனிலேயே டீல் செய்வதில் கைதேர்ந்த கில்லாடியான சம்பா செந்திலை கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த வழக்கறிஞர் காமேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக இன்றும் போலீசார் தேடிவருகின்றனர்.

ஒரு முறைகூட காவல்துறையால் நெருங்க முடியாதவராக வலம் வரும் ரவுடி சம்பா செந்தில் தொடர்பாக காவல்துறையினரிடம் உள்ள புகைபடம் கூட 10 ஆண்டுகளுக்கு முந்தையது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!

எந்த ஒரு அட்டாக்கிற்கும் ஸ்கெட்ச் போட்டு கொடுப்பதில் கில்லாடியான சம்பா செந்தில் , காரில் சென்று, சம்பவத்தை தள்ளி நின்று கண்காணித்து விட்டு தப்பிவிடுவார் என்கின்றனர் காவல்துறையினர். பெரும்பாலும் ஆந்திரா ,தெலுங்கானா மற்றும் மும்பை என பதுங்கி வாழ்ந்துவரும் சம்பா செந்தில் தற்போது பாம் சரவணனின் ஆதரவாளர்களுடன் கைகோர்த்து இருப்பது இந்த தாக்குதல் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாம் சரவணனின் அண்ணன் ஆதிதென்னரசுவை, ரவுடி ஆர்க்காடு சுரேசின் கூலிப்படை தீர்த்துக்கட்டிய சம்பவத்தின் பின்னணியில் காக்கா தோப்பு பாலாஜி இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவன் மீது ஆத்திரத்துடன் உள்ள பாம் சரவணன், சம்பா செந்தில் போட்டுக் கொடுத்த திட்டப்படி தனது ஆதரவாளர்கள் மூலம் பழிக்கு பழிவாங்கும் விதமாக இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.

கொலைக்கான ஸ்கெட்ச் மிஸ்ஸானாலும், காக்கா தோப்பு பாலாஜிக்கும், சிடி மணிக்கும் டப் கொடுக்க இன்னோரு ரவுடி குழு தலை நகரில் தயாராக உள்ளது என்பதை காவல்துறைக்கு இந்த தாக்குதல் சொல்லாமல் சொல்லி இருக்கின்றது.

நம்பர் ஒன் நாங்கள் தான் என பிரபல ரவுடிகள் தலையெடுத்து நின்றாலும், களத்தில் சென்று சம்பவம் செய்வது எல்லாம் 16 வயது முதல் 22 வயதுவரை உள்ள போதை இளைஞர்கள் என்பது தான் வேதனைக்குரிய உண்மை..!

அதே நேரத்தில் இரும்புக்கரம் கொண்டு ரவுடிகளை ஒடுக்கவில்லையெனில் தலைநகரில் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் தலைதூக்கும் என்றும் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகள் மட்டுமே இத்தகைய ரவுடிகளை கலங்கடிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments