கொரானா வைரஸ்... மூன்று நாடுகளில் முதல் உயிர்பலி

0 1327

உலகில் 60 நாடுகளுக்கும் மேல் கொரானா வைரஸ் பரவியுள்ள நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய 3 நாடுகள் கொரானா பாதிப்பினால் நிகழ்ந்த முதல் உயிரிழப்பை சந்தித்துள்ளன.

சீனாவின் ஊகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி வைரசான கொரானா, இன்றைய சூழ்நிலையில் உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் சனிக்கிழமை உயிரிழந்த 35 பேருடன் சேர்த்து பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 573 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரானா வைரஸ் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை உலக அளவில் 86 ஆயிரம் பேர் இவ்வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கொரானா வைரஸ் அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கை நிலையினை, உச்சபட்ச அளவுக்கு உயர்த்தியிருப்பதாக, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு அடுத்த படியாக அதிகபட்சமாக ஈரானில் 43 பேரும், இத்தாலியில் 29 பேரும், தென் கொரியாவில் 17 பேரும் கொரானாவால் பலியாகியுள்ளனர். தென்கொரியாவில் புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 376 பேரை சேர்த்து அங்கு கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,526 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டில் தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இத்தாலியில் பள்ளிகள், பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் முதல் கொரானா உயிரிழப்பை பதிவு செய்துள்ளன. அமெரிக்காவில் வாஷிங்டனை சேர்ந்த பெண்மணி கொரானாவால் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரானா பாதிப்பால் உயிரிழந்த 78 வயது முதியவர், ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து மீட்டு அழைத்துவரப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் 35 வயது நபர் கொரானா வைரசால் பலியான நிலையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் இருந்ததாக அந்நாட்டு நோய்த் தடுப்புத்துறை தெரிவித்துள்ளது.

அயர்லாந்து, ஆர்மீனியா ஆகிய நாடுகளில் முதல் நபருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலிக்கு சென்று திரும்பியவருக்கு அயர்லாந்தில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரானிலிருந்து ஆர்மீனியா திரும்பியவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான சேவை நிறுவனமாக கருதப்படும் துபாயின் எமிரேட்ஸ் நிறுவனம், ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மற்றும் ஊதியமில்லாத விடுப்புகளை வழங்கியுள்ளதால் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments