இயற்கை விவசாயம்... அசத்தும் ஐ.டி ஊழியர்.!

0 6551

இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தில், தான் பணியாற்றி வந்த கணிணி பொறியாளர் வேலையை  உதறி தள்ளிவிட்டு, பாரம்பரிய நெல்லான கிச்சலி சம்பாவை பயிரிட்டு தற்போது நல்ல மகசூலை கண்டுள்ளார் முன்னாள் ஐ.டி ஊழியர் ஒருவர். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கிரிதரன். கணினி துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள CTS என சுருங்க அழைக்கப்படும் காக்னிசென்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சுமார் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வர் மீது ஏற்பட்ட பற்றாலும், நெல்ஜெயராமன் மற்றும் சுபாஷ் பாலேகர் ((subash palekar)) அவர்களின் வழிகாட்டுதல் படியும் இயற்கை விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மென்பொறியாளர் பணியை துறந்த அவர், சொந்த ஊரான ஊத்துக்காட்டில், தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகமான கிச்சலி சம்பாவை நடவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன்படி நிலத்தின் ஒருபகுதியில் நாற்றங்கால் அமைத்த அவர், பிரதான நிலத்தை சமன்செய்து, தண்ணீர் பாய்ச்சி, ஒரு அடிக்கு ஒரு அடி இரும்பு ரோலர் வைத்து நிலத்தை அளவீடு செய்துள்ளார்.

பின்னர் ஒற்றை நாற்று முறையில் நாற்றை நடவு செய்த அவர், நாட்டு மாட்டு சாணம், கோமியம், சர்க்கரை, கொள்ளு மாவு, நிலத்தின் வரப்பு மணல் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கை உரங்களை மட்டும் நிலத்திற்கு பாய்ச்சியுள்ளார்.

மேலும் வயலை சுற்றி விஷப்பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக, துலுக்க சாமந்தி, காட்டு கம்பு, சோளம் ஆகியவற்றையும் நட்டுள்ளார். சுமார் 5 மாதங்கள் பக்குவமாக நெற்கதிர்களை வளர்த்த அவர், கடந்த 2 தினங்களாக நெல் அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளார்.

இயற்கை விவசாய முறையில், நஞ்சில்லா உணவு பொருள் உற்பத்தியே தமது இலக்கு என்கிறார், கிரிதரன்...

லட்சம் ரூபாய் சம்பளத்தை தந்த வேலை துறந்துவிட்டு, நஞ்சில்லாத உணவை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், இயற்கை விவசாயத்தை கையிலெடுத்திருக்கும் இந்த இளைஞரின் முயற்சியும், உழைப்பும் பாராட்டுக்குரியதே...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments