பெண் பெயரில் போலி ஐ.டி : இன்ஸ்டாகிராமில் ஏமாந்த கல்லூரி மாணவர்

0 1014

கல்லூரி மாணவர்கள் - இளைஞர்களை ஆசை காட்டி ஏமாற்றி,  நிர்வாண வீடியோவை பதிவு செய்து, சென்னையில் பணம் பறித்து வரும் ஒரு கும்பல் குறித்து, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களை பொறுத்தவரை, மிகவும் கவனமுடன் கையாளுமாறு, இளைஞர்களுக்கு, போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றங்களால், உலகம் இன்று, உள்ளங்கை அளவுக்கு சுருங்கி விட்டது. ஆனால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பிரச்சினைகளில் சிக்கி, தவித்து வருகிறார்கள். சென்னை- அயனாவரத்தைச்சேர்ந்த ஐசக் என்ற கல்லூரி மாணவர், புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

ரியா என்ற 2 எழுத்து பெண் பெயரில் வந்த ஒரு குறுஞ்செய்தியை நம்பி, தனது முகத்தை காட்டி, நிர்வாணமாக வீடியோ கால் செய்ததாக கூறும் ஐசக், அந்த வீடியோ காட்சியை யூ -டியூப்பில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி, ஒரு கும்பல் தம்மிடம் பணம் பறித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

போன் - பே பணப்பரிவர்த்தனை செயலி மூலம் இதுவரை, 59 ஆயிரம் ரூபாயை இழந்து விட்ட ஐசக், மோசடி கும்பலின் மிரட்டல் தொடர் கதையாக நீடித்ததால், வேறு வழியில்லாமல் போலீசில் புகார் கொடுத்தார்.

வெட்கத்தை விட்டு, நடந்த சம்பவங்களை போலீசில் விலா வாரியாக சொல்லிய கல்லூரி மாணவர் ஐசக், தம்மை போல வேறு சில இளைஞர்களும் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி, ஏமாந்து இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பெண் ஐ.டியில் அறிமுகமாகி, கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் மோசடி வலையில் வீழ்த்தி, பணம் பறிக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க, சென்னை - கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் முன் அறிமுகமில்லாத நபர்களிடம் எல்லை மீறி பேசினால், இது போன்ற மோசடி கும்பலிடம் சிக்கி, தவிக்க நேரிடும் என சைபர் கிரைம் போலீசார், எச்சரித்துள்ளனர். எது எப்படி இருந்தாலும், நாம் உஷாராக இருந்தால், நிச்சயம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments