கடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்

0 10179

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடனுக்கு சிக்கன் தராததால் சிக்கனில் கொரோனா வைரஸ் இருப்பதாக  வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டார். 

நெய்வேலியில் உள்ள சகானா சிக்கன் சென்டர் பற்றி பலரது வாட்ஸ் அப்க்கு ஒரு தகவல் வந்தது. அதில் இங்கு சிக்கன் வாங்கி சாப்பிட்ட பாண்டி என்பவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த தகவலை உண்மை என நம்பி சகானா சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க யாரும் செல்லவில்லை. திடீரென தனது கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவது முழுவதுமாக குறைந்து போனதால் அதிர்ச்சி அடைந்திருந்த உரிமையாளர் பக்ருதீன் அலிக்கும் அந்த வாட்ஸ்ஆப் வீடியோ வந்துள்ளது.

வீடியோவை பார்த்து அதிர்ந்த உரிமையாளர் பக்ருதீன் அலி உடனடியாக தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வாட்ஸ் ஆப் வீடியோவில் பேசிய நபர் 17 வயதே ஆன சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் சகானா சிக்கன் கடையில் சிறுவன் கடனுக்கு சிக்கன் கேட்ட நிலையில் உரிமையாளர் தர மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சகானா சிக்கன் கடை சிக்கனில் கொரானா வைரஸ் இருப்பதாக வாட்ஸ் ஆப்பில் வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த சிறுவன்.

இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவர் மீது தவறான தகவலை பரப்புதல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவருக்கு 17வயது என்பதால் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அந்த இளைஞர் கொரானா வைரஸ் குறித்து தான் பேசியது தவறு என்று வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments