2018 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மாணவன், தந்தை கைது

0 339

2018ஆம் ஆண்டு சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம்ஆண்டு படித்து வரும் மாணவனையும், உடந்தையாக இருந்த அவனுடைய தந்தையையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

2019ம் ஆண்டு தேசிய தேர்வு மையம் நடத்திய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு புரிந்திருக்கும் விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்தவர்களின் படத்தை வெளியிட்டு அவர்களையும் தேடி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த நவம்பர் மாதம் மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு மர்ம நபரிடம் இருந்து வந்த மின்னஞ்சலில், சென்னை மருத்துவ கல்லூரியில் பயிலும் 2ம்ஆண்டு மாணவன் ஒருவருக்கு இந்தி தெரியாது, ஆனால் 2018ம் ஆண்டு சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வில் பீகாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி நிர்வாகம் தரப்பில் பூக்கடை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையறிந்த மாணவனும், அவனுடைய தொழில் அதிபர் தந்தையும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து பூக்கடை போலீஸார் அளித்த தகவலின்பேரில், சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த மாணவன் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், தலைமறைவாக இருந்த மாணவன் மற்றும் அவனது தந்தையை கண்டுபிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறி, அவர்களை சிபிசிஐடி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் 2018 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 2500 மாணவர்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் யார் யாரென சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments