பார்த்து “பல்” பத்திரம் எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

0 1697

சாக்லேட், பிஸ்கட், குளிர்பானம், ஜங்க்புட்ஸ் மட்டுமின்றி மருந்துகளைக் கொடுப்பதாலும் குழந்தைகளுக்கு பல்சொத்தை ஏற்படுவதாக எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள். பற்களைப் பாதுகாப்புடன் பராமரிப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பச்சிளம் குழந்தைகள் தொடங்கி 12 வயது வரையிலான வளரும் பருவ காலங்கட்டங்களில் குழந்தைகளுக்கு முளைத்திருக்கும் இளம் பல், பால் பல் என்று அழைக்கப்படுகிறது.

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், விளையாடும் சமயங்களில் குழந்தைகள் விரும்பிக் குடிக்கும் எனர்ஜி டிரிங்க் ஆகியவற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, பல்லுக்கு பக்கபலமாக உள்ள எனாமல் எனப்படும் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னிசியம் ஆகிய வேதிப்பொருளை மெல்ல சிதைக்க ஆரம்பிக்கும்.

குழந்தைகள் அதிகமாக உணவாக எடுத்துக் கொள்ளக் கூடிய சாக்லேட், பிஸ்கட், நொறுக்குத் தீனிவகைகள் பல் ஈறுகளில் சிக்கிக் கொள்வது, பல் சொத்தைக்கு முக்கிய காரணமாக அமையக் கூடும் என்று எச்சரிக்கிறார் குழந்தைகள் அரசு பல் மருத்துவர் சாந்தி.

ஜலதோசம், இருமலுக்காக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் மருந்தைக் குடித்த பின்னர் வாயை கொப்பளிக்காவிட்டால் அதுவும் பல்லில் பாதிப்பை உண்டாக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

பல் சொத்தையினால், தாடை வளர்ச்சியின் போது வளரக்கூடிய பல் மேலும் கீழுமாக வளர்ந்து முகத்தின் தோற்றம் பொலிவில்லாமல் கோரமாக அமையும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பற்களை முறையாக கவனிக்காமல், மெத்தனமாக இருந்ததால் சென்னை பிராட்வேயில் செயல்பட்டுவரும் அரசு பல் மருத்துவமனைக்கு, தினமும் 100 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் சொத்தைப் பல் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

இது போன்ற பல் சொத்தையைத் தவிர்க்க தினமும் இரவு சாப்பாடு முடித்து படுக்கைக்கு செல்லும் முன்பாக நன்றாக பல் துலக்கி வாயைக் கொப்பளித்து செல்வதை வழக்கமாக்க வேண்டும் என்றும், வருடத்திற்கு ஒருமுறையாவது உடல் பரிசோதனை போல பல் பரிசோதனைக்கு குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் நலம் என்றும் அறிவுறுத்தும் மருத்துவர்கள், முறையான பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்வதால், பல் சொத்தையை போக்க வேர் சிகிச்சை, பல்லுக்கு கிளிப் போடுதல் போன்ற தேவையற்ற விபரீதத்தை தவிர்க்கலாம் என்கின்றனர்.

ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து 6 வயது வரை பல் வளரும், இந்த மாதிரியான பால் பற்கள் கீழே விழுந்து மீண்டும் வளரும் பற்களை கண்ணுக்கு இணையாக கவனம் செலுத்திப் பார்த்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்க வழிவகை செய்யும்.

இதற்காக நார்ச்சத்து உள்ள இயற்கை உணவுகளையும், காய்கறிகளையும் தொடர்ச்சியாக உண்டு வந்தால், உடலுக்கு மட்டுமல்ல- சொல்லுக்கு உறுதுணையாக இருக்கும் பல்லுக்கு என்றும் நன்மை பயக்கும் என்று அறிவுறுத்துகின்றனர் பல் மருத்துவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments